This Article is From Jun 08, 2018

'இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படாது!'- முதல்வர்

இந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதியன்று குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படாது என்று தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

'இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படாது!'- முதல்வர்

ஹைலைட்ஸ்

  • குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ல் நீர் திறக்க வேண்டும்
  • போதிய நீர் இல்லாததால் நீர் திறக்கப்படாது
  • சட்டமன்றத்தில் இது குறித்து அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி

இந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதியன்று குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படாது என்று தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படும். இப்படி திறக்கப்படும் நீரால், 3 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். டெல்டா பகுதி விவசாயிகள் இந்த நீரை நம்பியே குறுவை சாகுபடி செய்வர். இந்நிலையில், போதிய அளவு நீர் இல்லாததால் இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாது என்று தெரிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இது குறித்து இன்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர், `மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கப்படுவது வழக்கம் தான். ஆனால், இந்த ஆண்டு அணையில் போதிய நீர் இல்லை. 90 அடிக்கு நீர் இருந்தால் மட்டுமே பாசனத்துக்கு மேட்டூர் அணை நீர் திறக்கப்படும். ஆனால், தற்போது 36 அடி தண்ணீர் மட்டுமே இருக்கிறது. ஆகையால் இந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாது. ஆனால், விவசாயிகளுக்கு இது பேரிழப்பாக இருக்கும் என்பதை உணர்ந்து, இருக்கும் நீர் வசதியை வைத்து சாகுபடி செய்ய 115 கோடி ரூபாய்க்கு உதவித் தொகை அளிக்கப்படும். இந்த இக்கட்டான சூழ்நிலையை விவசாயிகள் எதிர்கொள்ள விதைகளுக்கு மானியம், விவசாயப் பொருட்களுக்கு மானியம் உள்ளிட்டவை அளிக்கப்படும்' என்றார்.

இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், `விவசாயிகளுக்கு தேவையான நேரத்தில் மேட்டூர் அணையைத் திறக்க முடியாத தமிழக அரசின் கையாளதத்தனத்தை கண்டிக்கின்றேன்' என்று தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சட்டமன்றத்தில் இருந்து தனது கட்சியினருடன் வெளிநடப்பு செய்தார். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தனர்.



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)

.