This Article is From Aug 01, 2020

ஆன்லைன் வகுப்பிற்கு ஸ்மார்ட் போன் இல்லாததால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை!

சிறுவன் தற்கொலையை காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமான மரண வழக்காகப் பதிவு செய்துள்ளனர்.

ஆன்லைன் வகுப்பிற்கு ஸ்மார்ட் போன் இல்லாததால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை!

சிறுவன் தற்கொலையை காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமான மரண வழக்காகப் பதிவு செய்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • ஸ்மார்ட் போன் இல்லாததால் மாணவன் தற்கொலை
  • கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
  • தனியார் பள்ளிகள் இணைய வழி வகுப்பை தொடர அரசு அனுமதி
Chennai:

கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு இணைய வழி வகுப்புகள் தற்போது நடப்பெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கடலூரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் இணைய வழி வகுப்பிற்காகத் தனது தந்தை ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுக்காத காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த மாணவன் கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலுள்ள வள்ளலார் உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். ஊரடங்கு காரணமாகப் பள்ளி விடுமுறை என்பதால் இணைய வழி வகுப்பைப் பள்ளி மேற்கொண்டது. இதற்கு ஸ்மார்ட் போன் வேண்டுமெனத் தனது தந்தையிடம் மாணவன் வற்புறுத்தியுள்ளான். சிறுவனின் தந்தை விஜய்குமார் முந்திரி விவசாயியாவார். ஊரடங்கு காலங்களில் தொழில்களில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக போதுமான வருமானமின்றி குடும்பம் தவித்து வந்துள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட் போன் வாங்கி கொடுப்பதாக காலந்தாழ்த்தி வந்த தந்தையின் நடவடிக்கை காரணமாக மாணவன் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளான்.

மார்ச் மாதத்திலிருந்து நாடு முழுவதும் கொரோனா நெருக்கடி காரணமாக முழு முடக்கம் அமலில் உள்ளது. இது  பல வருமான பற்றாக்குறை, சம்பள வெட்டுக்கள் மற்றும் வேலை இழப்புகளை உருவாக்கியுள்ளது. இதன்  காரணமாக பல ஏழை குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மாநில அரசு இலவச ரேஷனையும், மாதத்திற்கு ரூ .1,000 நிவாரணத் தொகையையும் மட்டுமே வழங்கி வருகிறது. இது மிகக் குறைந்த நிவாரணமாகும்.

இந்நிலையில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்த அதிமுக அரசு அனுமதியளித்துள்ளது. இது ஒருபுறமிருக்க மறுபுறத்தில் டிவி இல்லாத குடும்பங்கள் கூட உள்ளன. எனவே அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் சாத்தியமில்லை என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். இந்த இடர்பாடுகள் வளர்ந்து வரும் குழந்தைகள் மனதில் பெரும் அழுத்தத்தினை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.

“கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் பாதி சம்பளம் மற்றும் மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், ஒரு ஸ்மார்ட்போன் மற்றும் டேட்டா பேக் ரீச்சார்ஜ் செய்வது ஏழைக் குடும்பங்களுக்கு மட்டுமல்ல, கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலருக்கும் கற்பனை செய்ய முடியாதது” என்று ஆர்த்தி போவாஸ் என்ற கல்வியாளர் கூறியுள்ளார்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி சென்றடைய தமிழக அரசு சமீபத்தில் டிவி நெட்வொர்க் மூலம் வகுப்புகளைத் தொடங்கியது. இருப்பினும், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சில குழந்தைகள் படிக்கும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளன.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டிருந்தாலும், ஆர்வலர்கள் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்றும், இந்த பிரச்சினையை அவசரமாகக் கவனிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

இந்நிலையில் சிறுவன் தற்கொலையை காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமான மரண வழக்காகப் பதிவு செய்துள்ளனர்.

.