This Article is From Dec 11, 2019

உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு!

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு.

உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு!

உள்ளாட்சித் தேர்தலுக்கு தற்போது தடை எதுவும் இல்லை - உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை இல்லை என்றும் 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி அறிவித்தது. 

இந்நிலையில் வார்டு மறுவரையறை பணிகளை சரியாக முடிக்காததால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர எஞ்சிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி வழங்கியது. இதேபோல், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. 

எஞ்சிய மாவட்டங்களில் தேர்தல் நடத்துவது தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், வார்டு வரையறைகளை முடித்த பின் 9 மாவட்டங்களில் 4 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். 

இதைத்தொடர்ந்து கடந்த சனிக்கிழமை மாநில தேர்தல் ஆணையம் புதிய தேர்தல் அட்டவணை வெளியிட்டது. டிசம்பர் 27, 30-ந்தேதிகளில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்றும் மனுதாக்கல் 9-ந்தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை எனக் கூறி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வாதங்களையும், தமிழக அரசு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். 

அதன்படி, 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். ஊராட்சி தலைவர் உள்பட அனைத்து பதவிகளுக்கும் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தான் தேர்தல் நடத்த வேண்டும்.‘

மேலும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தற்போது தடை எதுவும் இல்லை. மேலும் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது என உத்தரவிட்டுள்ளது. 

.