This Article is From Mar 12, 2019

11 மாத காத்திருப்புக்குப் பின்னர் நிர்மலா தேவிக்கு ஜாமீன்!

சென்ற ஆண்டு, பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரியில் பயிலும் மாணவிகளை தவறான பாதையில் அழைத்ததாக கூறி பகீர் குற்றச்சாட்டு எழுந்தது

11 மாத காத்திருப்புக்குப் பின்னர் நிர்மலா தேவிக்கு ஜாமீன்!

நிர்மலா தேவிக்கு உதவியாக இருந்ததாக கூறி பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரையும் தமிழக காவல் துறை கைது செய்தது.

ஹைலைட்ஸ்

  • கடந்த ஆண்டு ஏப்ரலில் கைது செய்யப்பட்டார் நிர்மலா தேவி
  • அப்போதிலிருந்து அவருக்கு பலமுறை பிணை மறுக்கப்பட்டுள்ளது
  • வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மேலும் இருவருக்கு முன்னரே பிணை வழங்கப்பட்டது

கல்லூரி பெண்களை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார் நிர்மலா தேவி. இந்நிலையில் அவருக்கு இன்று நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 

சென்ற ஆண்டு, அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரியில் பயிலும் மாணவிகளை தவறான பாதையில் அழைத்ததாக கூறி பகீர் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஒரு ஆடியோவும் வெளியானது. அதில் நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்குத் தூண்டுவது பதிவாகியிருந்தது. அந்த போன் அழைப்பு ஆடியோவில், நிர்மலா தேவி, தற்போது தமிழக ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோகித் குறித்தும் பேசினார் என்றும் கூறப்பட்டது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. 

அதைத் தொடர்ந்து நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். நிர்மலா தேவிக்கு உதவியாக இருந்ததாக கூறி பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரையும் தமிழக காவல் துறை கைது செய்தது. திருவில்லிப்புத்தூரில் இருக்கும் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. 

முருகன் மற்றும் கருப்பசாமி சில மாதங்களுக்கு முன்னர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு சில நாட்களுக்கு முன்னர் பிணை வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நிர்மலா தேவிக்கும் பிணை வழங்கியது.

ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து நிர்மலா தேவியின் வழக்கறிஞர், பசும்பொன் பாண்டியன், ‘அரசு தரப்பு, நிர்மலா தேவிக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று இன்றும் வலியுறுத்தியது. இப்படி பல்வேறு இடையூறுகள் வந்த பின்னரும், இன்று சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது. ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், பத்திரிகையாளர்களை சந்திக்கக் கூடாது, விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று நிர்மலா தேவிக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன' என்று கூறினார். 

.