This Article is From Oct 12, 2018

நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை! - ஆளுநர் மாளிகை விளக்கம்

நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததும் இல்லை, அவரை ஆளுநர் சந்தித்ததும் இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது

நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை! - ஆளுநர் மாளிகை விளக்கம்

நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததும் இல்லை, அவரை ஆளுநர் சந்தித்ததும் இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

2 நாட்களுக்கு முன்னதாக ஆளுநர் குறித்து அவதூறு பரப்பியதாக, ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நக்கீரன் வார இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் உட்பட 35 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 124 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் 124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க முடியாது என நீதிமன்றம் தெரிவிக்கவே அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,

''ஆளுநருக்கோ, ஆளுநர் மாளிகைக்கோ, நிர்மலா தேவியுடன் எந்த சம்பந்தமும் இல்லை. நிர்மலா தேவி, காவல்துறையிடம் அளித்த வாக்குமூலமே உண்மையை உணர்த்தும்.

எல்லா விவகாரங்களுக்கும் குறிப்பிட்ட எல்லைகள் உண்டு. இதனாலேயே நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை அமைதி காத்து வந்தது. ஆனால் அனைத்து விசாரணைகளும் முடிந்த பிறகும், முறையற்ற வகையில் கடந்த செப்டம்பர் மாதம் நக்கீரன் வார இதழ் செய்தி வெளியிட்டது. இதனால் மாநிலத்தின் முதல் குடிமகனின் மீது மோசமான அவதூறுகளை, சுமத்துவதை நிறுத்த சட்டப்படி புகார் அளிக்கப்பட்டது.

இதுவரை, நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை. அவரை ஆளுநர் சந்தித்தார் என்ற குற்றச்சாட்டும் தவறானது. ஆளுநரையோ, அவரின் செயலாளரையோ அல்லது ஆளுநர் மாளிகை அதிகாரிகளையோ நிர்மலா தேவி சந்தித்தும் இல்லை. அப்படி இருக்கும் போது, உண்மைக்குப் புறம்பாக, எழுதப்பட்ட செய்தியே வெளிவந்தது.

ஜனநாயக நாட்டில், கருத்துகளை ஆரோக்கியமான முறையில் பரிமாறிக் கொள்ளலாம். ஆனால் ஆளுநர் மீதான நேரடி மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களை சகித்துக்கொள்ள முடியாது. ஆளுநரின் நன்மதிப்பை கெடுக்கும் செயல்களுக்கு ஆளுநரின் அலுவலகம் ஒருபோதும் அடிபணியாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.