This Article is From May 24, 2019

சூரத்தில் உள்ள பயிற்சி மையத்தில் தீ விபத்து: 18 மாணவர்கள் பலி!

இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது குஜராத் மாநில அரசு.

இந்த சம்பவத்தை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் செய்தி தெரிவித்தார். 

ஹைலைட்ஸ்

  • சூரத்தில் இருக்கும் தகாஷாஷிலா கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது
  • பலர் கட்டடத்தில் இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள குதித்தனர்
  • அவர்கள் நிலைமை என்னவென்று இதுவரை தெரியவில்லை.
Surat:

குஜராத் மாநிலத்தின் சூரத்தில் இருக்கும் பயிற்சி மையம் ஒன்றில் இன்று மதியம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் இதுவரை 18 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நடக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பல மாணவர்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கட்டடத்தில் இருந்து குதிப்பது அந்த வீடியோவில் தெரிகிறது. 

தீ விபத்து ஏற்பட்ட பயிற்சி மையத்தில் 14 முதல் 17 வயது மாணவர்கள் படித்து வந்தார்கள் என்று கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, கட்டடத்துக்குக் கீழே இருக்கும் மக்கள், மாணவர்களை குதிக்கச் சொல்லும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. இதைக் கேட்டு குதித்த மாணவர்கள் யாராவது உயிர் பிழைத்தார்களா என்பது தெரியவில்லை. 

‘சூரத்தில் இருக்கும் தகாஷாஷிலா கட்டடத்தில் இன்று மதியம் 3:30 மணி அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது' என்று அதிகாரிகள் நம்மிடம் தகவல் கூறியுள்ளனர். இந்த தீ விபத்துக்குக் காரணம் என்ன என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. 

ndrcqh58

“3 மற்றும் 4வது மாடியில் இருந்த மாணவர்கள், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கீழே குதித்தனர். அதில் பலர் காப்பாற்றப்பட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தீயை அணைக்கத் தொடர்ந்து முயன்று வருகிறோம்” என்று தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 19 தீயணைப்பு வண்டிகள், கட்டடத்தில் பரவிய தீயை அணைக்க முயன்றன. 

இந்த சம்பவத்தை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் செய்தி தெரிவித்தார். 
 

இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது குஜராத் மாநில அரசு. மேலும் அரசு தரப்பில், தீ விபத்தில் உயிரழந்தவர்களுக்கு 4 லட்ச ரூபாய் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 


 

.