This Article is From Feb 04, 2019

“39 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றுவோம்”- காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி பேட்டி

காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் கே.எஸ்.அழகிரி

“39 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றுவோம்”- காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி பேட்டி

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் விஸ்வாசியாக அறியப்படும் கே.எஸ்.அழகிரி, 2009 ஆம் ஆண்டு கடலூரிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஹைலைட்ஸ்

  • தமிழக காங்., தலைவர் பொறுப்பிலிருந்து திருநாவுக்கரசர் நீக்கப்பட்டுள்ளார்
  • அவரது நீக்கத்தை அடுத்து, கே.எஸ்.அழகிரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
  • 4 செயல் தலைவர்களும் தமிழக காங்கிரஸுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள்

காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் கே.எஸ்.அழகிரி. பதவியேற்ற பின்னர் அவர் பேசியபோது, “தமிழகத்தில் இருக்கும் 39 மக்களவைத் தொகுதிகளையும் புதுச்சேரியில் இருக்கும் 1 தொகுதியையும் கைப்பறுவதே எனது பிரதான நோக்கம்” என்று கூறியுள்ளார். 

தமிழ்நாடு காங்கிரஸுக்குத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, “கட்சியின் அடிமட்ட கட்டுமானத்தைப் பலப்படுத்த வேண்டும். அதுவே, நாங்கள் வெற்றி பெறுவதற்கு முக்கய காரணியாக இருக்கும்” என்றார். 

அவர் தொடர்ந்து, “எங்கள் கூட்டாளிகளான மதசார்பற்ற கட்சிகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 லோக்சபா தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்று முனைப்பு காட்டுகிறது. அதற்கு காங்கிரஸும் தன்னால் ஆன முழு ஒத்துழைப்பை கொடுக்கும்” என்று தெளிவுபடுத்தினார். 

2019 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், கே.எஸ்.அழகிரி காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பல மாதங்களாக காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு வந்த திருநாவுக்கரசரின் நீக்கமும் ஏன் என்ற கேள்விகளும் அரசியல் தளத்தில் ஓங்கி ஓலித்து வருகின்றன. 

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மேலும் பேசிய அழகிரி, “மாநிலத்தில் ஆளும் அதிமுக, மத்தியில் ஆளும் பாஜக ஆகிய இரு கட்சிகளும், நாட்டின் வளர்ச்சியை அதளபாதாளத்துக்கு இட்டுச் சென்றுள்ளன. பொருளாதாரம், விவசாயம், சமூகம் என எந்தத் தளத்திலும் அவர்களுக்கு புரிதல் இல்லை. அதனால்தான் அனைத்து மட்டங்களிலும் நாடு பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. 

விவசாயத்தில் தேக்க நிலையை சந்தித்து வருகிறோம். ஜிஎஸ்டி தொழில் துறையை முடமாக்கியுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்து ஏறு முகத்தில் இருக்கிறது. 

40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் அடிமட்டத் தொண்டனாகவே உழைத்து வந்துள்ளேன். எனக்குத் தலைவர் பொறுப்பு கொடுத்ததற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முடித்தார். 

அழகிரியுடைய நியமனத்துடன், வசந்த குமார், கே.ஜெயக்குமார், எம்.கே,விஷ்ணு பிரசாத் மற்றும் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் கட்சியின் செயல் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் விஸ்வாசியாக அறியப்படும் கே.எஸ்.அழகிரி, 2009 ஆம் ஆண்டு கடலூரிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


 

.