This Article is From Oct 02, 2018

புதிய தலைமைச் செயலகம் குறித்த வழக்கு: கொதி கொதித்த உயர் நீதிமன்றம்!

திமுக ஆட்சியில் அண்ணா சாலையில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் குறித்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளது.

புதிய தலைமைச் செயலகம் குறித்த வழக்கு: கொதி கொதித்த உயர் நீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்றம்

Chennai:

திமுக ஆட்சி புரிந்த போது கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டடத்தில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம் சாட்டி, அது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது அதிமுக. இந்த கமிஷனின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கோரி 2015 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 12 ஆம் தேதி உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த கமிஷனை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டது.

இதையொட்டி இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம், ‘புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்ட, 400 கோடி ரூபாய் பொதுமக்கள் வரிப் பணம் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அது வீணடிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த கட்டடம், மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அதற்கும் சில கோடிகள் செலவழிக்கப்பட்டது. இதையடுத்து, ஆட்சி மாற்றம் நடைபெற்று, கட்டடம் கட்டியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டிய அரசு, விசாரணை கமிஷன் அமைத்தது.

அந்த விசாரணை ஆணையம் எந்தப் பணிகளையும் செய்யவில்லை. அதற்கும் 5 கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்யப்பட்டுள்ளது. இப்படி தொடர் செலவுகளுக்கு உட்படுத்தப்பட்டு, அந்த கட்டடம் எதற்கும் பயன்படாத வகையில் இருக்கிறது.

அரசுகள் மாறினாலும், எடுக்கும் ஒவ்வொரு முடிவும், அரசியல் கொள்கைகளைத் தாண்டியதாக இருக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் அரசியல் காரணங்களுக்காகத் தான் அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.

கட்டடம் கட்டியதில் முறைகேடு நடந்திருப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வந்தாலும், அது குறித்தான் விசாரணையில் எந்த வித ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை. பொது மக்கள் நலனுக்கு எதிராகவே இந்த மொத்த விஷயமும் நடத்தப்பட்டுள்ளது’ என்று கூறி தமிழக அரசை நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

.