This Article is From Aug 01, 2019

சாலை விதி மீறல்கள் - கடுமையாகும் தண்டனைகள்.. விரைவில் அமலாகிறது!

இந்த சட்டத்தின்படி, வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறும்போது அதற்கான தண்டனையாக இனி ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம், 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது.

வேகமாக வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு ரூ.1000 முதல் 2000 வரை அபராதம் விதிக்கப்படும்

New Delhi:

வாகன சட்டங்களை கடுமையாக்கும் வகையில், புதிய மோட்டார் வாகன சட்டத்திருந்த மசோதா மாநிலங்களவையிலும் நேற்று நிறைவேறியது. 

அதிகரித்து வரும் விபத்துகளை குறைக்கும் நடவடிக்கையாக வாகன சட்டங்களை கடுமையாக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி, புதிய வாகன சட்டத்திருந்த மசோதாவை கொண்டுவந்தது. இந்த மசோதா மக்களவையை தொடர்ந்து, மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த பின்னர் அது சட்டமாகும்.

இந்த சட்டத்தின்படி, வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறும்போது அதற்கான தண்டனையாக இனி ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம், 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது. 

அதன்படி, ஆம்புலான்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்களுக்கு வழி விடாமல் செல்வது போன்ற தவறுகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வாகன ஓட்டிகள் இழைக்கும் சிறிய தவறுகளுக்கான அபராதம் 100 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. அதிவேகமாக வண்டியை ஓட்டி செல்வபவர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.2000 வரை அபாரதம் விதிக்கப்படும். 

உரிமம் இன்றி ஓட்டுபவர்களுக்கு அபராதம் 500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. உரிய தகுதியின்றி வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் அபராதம் 500 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. 

வாகனத்தை ஆபத்தான வகையில் ஓட்டினால் தற்போது 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், அது 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் தற்போது கட்ட வேண்டியுள்ள நிலையில் அது இனி 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. 

சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கும் போது அபராதம் 100 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கிறது. 2 சக்கர வாகனங்களில் அதிக சுமை ஏற்றிச் சென்றால் தற்போது 100 ரூபாய் மட்டுமே அபராதமாக உள்ளது. ஆனால் அது 2 ஆயிரம் ரூபாயாக உயர்வதுடன் 3 மாதங்களுக்கு உரிமம் ரத்தும் செய்யப்படும். 

சிறார் வாகனம் ஓட்டும் போது அவ்வாகனத்தின் உரிமையாளர் அல்லது பாதுகாவலருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் என்பதுடன் 3 ஆண்டு சிறைவாசமும் அனுபவிக்க வேண்டியிருக்கும். இது வாகனத்தை ஓட்டிய சிறுவன் மீது சிறார் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுகுறித்து போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறும்போது, இந்தியாவில், 22 முதல் 25 லட்சம் ஓட்டுநர்கள் தட்டுப்பாடு உள்ளது. இந்த தட்டுப்பாட்டை போக்க புதிய ஓட்டுநர் பயிற்சி மையம் திறப்பவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.1 கோடி வரை மானியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

மேலும், ஓட்டுநர் உரிமங்களைப் பெற அனைத்தும் கணினிமயமாக்கப்படுகிறது. இதில், அமைச்சராக இருந்தாலும் சரி, எம்.பி.யாக இருந்தாலும் சரி எவரும் ஆன்லைனில் செயல்முறை தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரே உரிமங்களைப் பெறுவார்கள் என்று அவர் கூறினார்.


 

.