This Article is From Jul 17, 2018

கர்நாடகாவில் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டவரின் தாய் கதறல்!

கர்நாடகாவின் பிடார் பகுதியில் குழந்தை கடத்தல்காரர்கள் என்று சந்தேகப்பட்டு 3 பேர் மீது உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்

Hyderabad:

கர்நாடகாவின் பிடார் பகுதியில் குழந்தை கடத்தல்காரர்கள் என்று சந்தேகப்பட்டு 3 பேர் மீது உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்ற இருவருக்கு பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்வரின் பெயர் முகமது அசாம் என்று தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் படித்த அவர், ஐதராபாத்தில் இருக்கும் ஆக்சஞ்சர் மென் பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். 

ஐதரபாத்திலிருந்து பிடார் பகுதிக்கு அசாம் மற்றும் அவரது நண்பர்கள் முகமது சலாம் மற்றும் முகமது சல்மான் ஆகியோர் பிக்னிக் சென்றுள்ளனர். அப்போது, மூவரில் ஒருவர் உள்ளூர் குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கியுள்ளார். இதை வைத்து, அவர்கள் குழந்தை கடத்தல்காரர்கள் என்று சந்தேகப்பட்டு உள்ளூர் மக்கள் தாக்க ஆரம்பித்துள்ளனர். காரில் தப்பியோட முயன்ற அவர்கள், நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தனர். அப்போது, உள்ளூர் மக்கள் அவர்களை வெளியில் இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால், அசாம் உயிரிழந்தார். மற்ற இருவருக்கு பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 150 முதல் 200 பேர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 32 பேர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். மனோஜ் பாட்டில் என்பவர் தான் இந்த சம்பவத்தை முன்னின்று நடத்தியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து முகமது அசாமின் தந்தை முகமது ஓஸ்மான், ‘என் மகன் இறப்பதற்கு முன்னர் ஐடி கார்டை காண்பித்துள்ளான். ஆனால் எதையும் கேட்காமல் வதந்தியை வைத்து அவனை அடித்துக் கொன்றுள்ளனர் கலவரக்காரர்கள். அவர்களை யார் என்று கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்கும்படி அரசுக்குக் கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.

உயிரிழந்த அசாமின் தாயார், ‘என் மகன் என்ன செய்தான்? நாட்டின் எல்லையைக் கடந்தானா? சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸ் ஏன் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை’ என்று கண்ணீர் மல்க கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்த திடுக்கிடும் சம்பவம் குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா, ‘நடந்த இந்த சம்பவம் குறித்து நாங்கள் கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுப்போம்’ என்று உறுதியளித்துள்ளார்.

.