Banner death: அரசு நினைத்தால் அடுத்தவினாடியே குற்றவாளியை கைது செய்திருக்கலாம். ஆனால் நாடகமாடுகிறார்கள் - ஸ்டாலின்
Banner death: சென்னையில் பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் (Subasree) குடும்பத்தினரை திமுக தலைவர் (M.K.Stalin) மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் (Subashree) சுபஸ்ரீ. ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் சுபஸ்ரீ, கடந்த 12ஆம் தேதியன்று, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் மீடியனில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது கவிழ்ந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையில் பல்வேறு இடங்களிலும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் அவரது மகன் திருமணத்திற்காக நீதிமன்ற உத்தரவை மீறி சாலையில் பேனர் மற்றும் கொடி கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனரில் ஒன்றே சுபஸ்ரீயின் உயிரை பறித்தது. மீடியனில் வைக்கப்பட்டிருந்த அந்த பேனரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் படங்கள் இடம்பெற்றிருந்தது.
தமிழகம் முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து, பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று திமுக, அதிமுக, அமமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தன.
தொடர்ந்து, அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சினிமா நடிகர்களும் தங்களது ரசிகர்களுக்கு பேனர்கள் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். சென்னையில் அண்மையில் நடந்த ‘காப்பான்' பட பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பேசும் போது, எனது ரசிகர்கள் யாரும் கட்-அவுட், பேனர்கள் வைக்க வேண்டாம் என ஏற்கனவே பலமுறை கூறியுள்ளேன். அதனால், இனி அதனை தவிர்த்து அந்த தொகையை கல்விக்குச் செலவிடுங்கள், ரத்த தானம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடங்கள் என கேட்டுக் கொண்டார். இதேபோல், நடிகர் விஜய்யும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பேனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, நேற்று முன்தினம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், இன்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் இல்லத்திற்கு நேரில் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுபஸ்ரீயின் தந்தை ரவி மற்றும் தாய் கீதாவுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறோம். அப்போது, சுபஸ்ரீயின் தந்தை ரவியிடம் என்னிடம் பேசும்போது, ‘பேனரால் ஏற்படும் உயிரிழப்பு இதுவே கடைசியாக இருக்கட்டும். இது தொடரக்கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்றார். அவர் சொன்னது மறக்க முடியாது.
பேனர் மரணம் குறித்து கேள்விப்பட்டதும், நாங்களே முன்வந்து திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்தோம். அதில், நாங்கள் சட்டத்தை மீறி அனுமதி இல்லாமல் எங்கும் பேனர் வைக்கமாட்டடோம் என்று கூறி உள்ளோம்.
திமுக நிகழ்ச்சிகள் நடத்தும்போது, அடையாளத்திற்கு ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் அனுமதி பெற்று பேனர் வைத்து விட்டு நிகழ்ச்சியை நடத்தவேண்டும். அதைமீறி யாராவது வைத்தால் திமுக நடவடிக்கை எடுக்கும் என அறிவித்தது மட்டுமல்லாமல், நீதிமன்றத்திலும் கூறி உள்ளோம். என்னைப் பொருத்தவரை பேனர் கலாச்சாரம் இருக்கக்கூடாது என்பதுதான் என் கருத்து.
பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு திமுக அறக்கட்டளை சார்பில் 5 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறோம். என்னதான் நிதி உதவி வழங்கினாலும் அவர்களுக்கு அது ஆறுதலாக அமையாது. அவரது தாய், தந்தைக்கு ஆறுதலை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கிறேன்.
பேனர் வைத்தது தொடர்பான வழக்கில் அரசு நினைத்தால் அடுத்தவினாடியே குற்றவாளியை கைது செய்திருக்கலாம். ஆனால் நாடகமாடுகிறார்கள் என்று அவர் கூறினார்.