This Article is From Mar 23, 2020

பட்டியலில் இல்லாத ஈரோடு ஏன் முடக்கப்பட்டது? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

Coronavirus; தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து, மாநிலத்தில் 3 மாவட்டங்களை மார்ச்.31ம் தேதி வரை தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பட்டியலில் இல்லாத ஈரோடு ஏன் முடக்கப்பட்டது? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு

ஹைலைட்ஸ்

  • இதுவரை பட்டியிலில் இல்லாத ஈரோடு ஏன் முடக்கப்பட்டது?
  • நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு
  • தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளின் பட்டியலில் இதுவரை இடம்பெறாத ஈரோடு மாவட்டம் ஏன் முடக்கப்பட்டது என்பது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். 

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவை மார்ச் 31 ஆம் தேதி வரை கடைப்பிடிக்குமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

அதிகபட்சமாகக் கேரளா மற்றும் மகாராஷ்ட்டிராவில் 10 மாவட்டங்களைத் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களைத் தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மூன்று மாவட்டங்களிலும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர அனைத்தையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஏற்கெனவே 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்றைய தினம் கலிபோர்னியாவிலிருந்து வந்த நபருக்கும், துபாயிலிருந்து வந்த நபருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, கலிபோர்னியாவிலிருந்து வந்த நபர் சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையிலும், துபாயிலிருந்து வந்த நபர் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டிலும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

சென்னையில் கொரோனா பாதித்து 4 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் சிகிச்சை பெற்று பின்னர் குணமாகி வீடு திரும்பிவிட்டார்.

சென்னைக்கு வெளியே, நேற்று காலை கோவையில் ஒரு பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனினும், ஈரோடு மாவட்டம் ஏன் மத்திய அரசின் பட்டியலில் வந்தது என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு விளக்கமளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவமனையில் தாய்லாந்தைச் சேர்ந்த இருவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல, அதனால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் உங்களுக்குத் தெளிவைத் தரும் என்று நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார். 

.