This Article is From Oct 30, 2018

தினகரன் ஒரு மண் குதிரை!’- ஜெயக்குமார் கிண்டல்

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை, நந்தனத்தில் இருக்கும் முத்துராமலிங்கம் சிலைக்கு மரியாதை செலுத்தினார் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்

தினகரன் ஒரு மண் குதிரை!’- ஜெயக்குமார் கிண்டல்

சசிகலா குடும்பத்தைத் தவிர வேறு யார் கழகத்துக்கு வந்தாலும் அவர்களை சேர்ப்பது குறித்து பரிசீலிப்போம், ஜெயக்குமார்

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை, நந்தனத்தில் இருக்கும் முத்துராமலிங்கம் சிலைக்கு மரியாதை செலுத்தினார் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தினகரன் ஒரு மண் குதிரை' என்று கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், ‘தினகரன் ஒரு மண் குதிரை. அவரை நம்பி ஆற்றில் இறங்கியவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். சசிகலா குடும்பத்தைத் தவிர வேறு யார் கழகத்துக்கு வந்தாலும் அவர்களை சேர்ப்பது குறித்து பரிசீலிப்போம்' என்று கூறினார்.

தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கமும் செல்லும் என்று சில நாட்களுக்கு முன்னர் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தெரிவித்தார். இதற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் மத்தியிலேயே இரு வேறு கருத்து இருப்பதாக தகவல்கள் கசிந்தன.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது தினகரன், ‘எங்கள் முகாமில் ஒரு குழப்பமும் இல்லை. உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என்று நாங்கள் அனைவரும் ஒரு மனதாக முடிவெடுத்திருக்கிறோம்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் அதிமுக சார்பில் பிரிந்த சென்ற உறுப்பினர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஒ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், ‘ஜெயலலிதாவின் வழியில் ராணுவக் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு வரும் அதிமுக-வில் நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக, அன்பும், பாசமும் கொண்ட சகோதர உணர்வுடன் மக்கள் பணி ஆற்றி வருகிறோம். சில தவறான வழி நடத்துதல்களின் விளைவாகவும், ஆங்காங்கே கழக உடன்பிறப்புகளிடையே நிலவிய சிறு சிறு மனக் கசப்புகள் காரணமாகவும், மக்கள் பணியாற்ற வாய்ப்புகள் தேடியும் மாற்றுப் பாதையில் பயணிக்கச் சென்ற கழக உடன்பிறப்புகள், உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, அதிமுக என்னும் மகத்தான மக்கள் இயக்கத்தில் மீண்டும் வந்து இணைய வேண்டும் என்று மிகுந்த பாசத்தோடும், அன்போடும் அழைக்கிறோம்' என்று பகிரங்கமாக மாற்று அணியில் இருக்கும் அதிமுக-வினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளியீட்டுக்குப் பிறகு, தினகரன் முகாமில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

.