This Article is From Oct 14, 2018

“#MeToo விவகாரம்: வெளியுறவு இணை அமைச்சர் பதவியில் நீடிப்பாரா எம்.ஜே. அக்பர்?

அக்பருக்கு எதிராக தீவிரம் அடைந்து வரும் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இறுதி முடிவு எடுப்பார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

அக்பர் விளக்கம் அளிக்க வேண்டும் என அவரை பாஜக வற்புறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

New Delhi:

மூத்த பத்திரிகையாளராக இருந்து தற்போது மத்திய வெளியுறவு இணை அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் எம்.ஜே. அக்பருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தீவிரம் அடைந்து வருகின்றன. கடந்த வாரம் இந்த விவகாரம் வெடித்த போது, அரசுமுறை பயணமாக அக்பர் நைஜீரியாவில் இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை அவர் டெல்லிக்கு வந்தார். விமான நிலையத்தில் அவரை சந்தித்த செய்தியாளர்கள் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, “ என் மீதான புகார்கள் தொடர்பாக விரைவில் அறிக்கை வெளியிடுவேன்” என்று மட்டும் கூறிவிட்டுச் சென்றார்.

பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் அவருக்கு கீழே பணியில் இருந்த பெண் பத்திரிகையாளர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்பதுதான் அக்பர் மீதான குற்றச்சாட்டு.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், அக்பரின் பதவி பறிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், அக்பருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தீவிரம் அடைந்திருக்கின்றன. எனவே அவர் பதவியில் நீடிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிதான் இறுதி முடிவு எடுப்பார் என்றனர்.

மத்திய சமூக நீதி மற்றும் பெண்களை சக்திபடுத்துதல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அளித்த பேட்டியில், “ குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் எம்.ஜே. அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி, அக்பருக்கு எதிரான புகார்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

.