This Article is From Jul 01, 2020

'சீனாவுடனான எல்லை பிரச்னையில் பாஜகவுக்கு உறுதுணையாக இருப்பேன்' : மாயாவதி

மக்களுக்கு செய்ய வேண்டியதை காங்கிரஸ் கட்சி செய்யத் தவறியதால்தான் நாங்கள் பகுஜன் சமாஜ் கட்சியையே ஆரம்பித்தோம். பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர் உள்ளிட்டோரது  நலன்களை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது என்று மாயாவதி கூறியுள்ளார்.

'சீனாவுடனான எல்லை பிரச்னையில் பாஜகவுக்கு உறுதுணையாக  இருப்பேன்' : மாயாவதி

பெட்ரோல் விலை உயர்வை மாயாவதி விமர்சித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • இந்தியா - சீனா இடையே கடந்த 15-ம்தேதி லடாக் எல்லையில் மோதல் வெடித்தது
  • பாஜக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஆதரவாக இருப்பதாக மாயாவதி கருத்து
  • காங்கிரஸ் கட்சியை தனது அறிக்கையில் மாயாவதி கடுமையாக சாடியுள்ளார்.
New Delhi:

சீனாவுடனான எல்லை பிரச்னையில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.  எல்லை பிரச்னையில்,  பாஜக மற்றும் காங்கிரஸ்  கட்சிகள் அரசியல் செய்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

லடாக்கில் நடந்த எல்லை பிரச்னை குறித்து மாயாவதி கூறியதாவது-

இந்தியா - சீனா எல்லை பிரச்னையில் பாஜக எடுக்கும் முடிவுகளுக்கு எனது பகுஜன் சமாஜ் கட்சி உறுதுணையாக இருக்கும். எல்லை விவகாரத்தில் பாஜகவும், காங்கிரசும்  ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து விட்டனர்.  இந்த நேரத்தில் இவ்வாறு செய்வது நாட்டுக்கு தேவையற்றது. 

இந்தியாவில் கட்சிகள் ஒருவருக்கொருவர் விமர்சிப்பதை சீனா  தனக்கு சாதகமாக எடுத்துக் கொள்கிறது.  இதுபோன்ற அரசியலால்தான் இந்தியர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. 

மக்களுக்கு செய்ய வேண்டியதை காங்கிரஸ் கட்சி செய்யத் தவறியதால்தான் நாங்கள் பகுஜன் சமாஜ் கட்சியையே ஆரம்பித்தோம். பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர் உள்ளிட்டோரது  நலன்களை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. 

பகுஜன் சமாஜ் என்பது சுதந்திரமாக செயல்படும் தேசிய கட்சி. நாங்கள் பொம்மை அல்ல என்பதை காங்கிரஸ் - பாஜகவுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். லடாக் எல்லையில் அமைந்திருக்கும் கால்வான் ஏரி பகுதியில்  இந்திய வீரர்கள் மீது சீன ராணுவத்தினர் கடந்த 15-ம்தேதி தாக்குதல் நடத்தினர். இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த ஹவில்தார் பழனி உள்பட 20 பேர் உயிரிழந்தனர். 

சீனா தாக்குதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினார்.  இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

சீனா விவகாரத்தில் அதிமுக உள்ளிட்ட  பல்வேறு கட்சிகள் மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்திருந்தனர்.

காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறுகையில், '1962-ல் என்ன நடந்தது என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. அன்று 45 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனா ஆக்கிரமித்தது.  தற்போது  மீண்டும் அவர்கள் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்களா என்பதை என்னால் சொல்ல முடியாது. இருப்பினும், கடந்த கால சம்பவங்களை எடுத்துரைப்பது அவசியமாக இருக்கிறது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் அரசியலாக்கப்படக் கூடாது' என்று தெரிவித்தார். 


 

.