2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, உத்தர பிரதேசத்தில் இருக்கும் 80 தொகுதிகளில் 72-ல் வெற்றி பெற்றது.
New Delhi: உத்தர பிரதேசத்தில் நீண்ட நாள் அரசியல் எதிரிகளாக இருந்த அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் இந்த முறை கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து வருகின்றன. மிகவும் பரபரப்பான உ.பி அரசியல் சூழலில், மாயாவதி பிரதமராக பதவியேற்க தான் ஆதரவு கொடுப்பேன் என்று கூறியுள்ளார் அகிலேஷ்.
இந்த விஷயம் குறித்து NDTV-யின் பிரணாய் ராய் கேட்டபோது, “எல்லாருக்கும் எனது நிலைப்பாடு என்ன என்பது தெரியும். உத்தர பிரதேசத்தில் இருந்து ஒருவர்தான் பிரதமராக வேண்டும் என்பது எனது விருப்பம். நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம் என்றாலும், உத்தர பிரதேசத்தில் இருந்து அது இருக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு” என்றார்.
உத்தர பிரதேச வாரணாசியில்தான் பிரதமர் மோடியும் போட்டியிடுகிறார் என்பதை சுட்டிக்காட்டி, “கண்டிப்பாக வாரணாசியில் இருந்து இருக்கக் கூடாது. அவர் நாட்டுக்கு அதிக தீங்கிழைத்துவிட்டார்” என்றார். யார் பிரதமர் ஆக வேண்டும் என்பது குறித்து உறுதிபட கூறாத அகிலேஷ், “மே 23 ஆம் தேதி அதற்கான பதில் கிடைத்துவிடும்” என்று சூசகமாக கூறியுள்ளார்.
தனக்கு பிரதமர் ஆசை உள்ளதா என்றதற்கு, “எனக்கு அதைப் போன்ற கனவுகள் இல்லை” என்று முடித்துக் கொண்டார்.
உத்தர பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்து இறுதியாக பேசிய அகிலேஷ், “எத்தனை தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூற முடியாது. ஆனால் பாஜக-வுக்கு ஒற்றை இலக்கில்தான் தொகுதிகள் கிடைக்கும்” என்றார் உறுதிபட.
2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, உத்தர பிரதேசத்தில் இருக்கும் 80 தொகுதிகளில் 72-ல் வெற்றி பெற்றது. அதேபோல 2017 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 403 இடங்களில் 312-ஐ கைப்பற்றி ஆட்சியமைத்தது. அந்தத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு 47 தொகுதிகளும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 18 தொகுதிகளும் மட்டுமே கிடைத்தன. இந்த முறை சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜும் கூட்டணி வைத்துள்ளதால், தேர்தலில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.