This Article is From Aug 17, 2018

வாஜ்பாய் மரணம்: இரவோடு இரவாக 500 கிமீ பயணித்து டெல்லி வந்த தொண்டர்

52 வயதான யோகேஷ் குமார் உத்தராகண்டின் உத்தரகாசியிலிருந்து ஒரு குழுவாக டெல்லி வந்துள்ளார்

வாஜ்பாய் மரணம்: இரவோடு இரவாக 500 கிமீ பயணித்து டெல்லி வந்த தொண்டர்
New Delhi:

நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாது இருந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் (93) நேற்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மறைந்தார்.

அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் அவரது இல்லத்தின்முன் வரிசையில் காத்திருக்கின்றனர்.

மத்திய டெல்லியில் வாஜ்பாயின் இல்லம் உள்ள 6-ஏ, கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் காவல்துறையினர், போக்குவரத்துக்காவலர், துணைராணுவப் படையினர் எனக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் காலை 7:30 மணி முதல் வாஜ்பாய்க்கு இறுதி மரியாதை செலுத்த அனுமதிக்கப்பட்டு வருவதாக அங்கு உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வாஜ்பாயின் உடல் பின்னர் தீன் தயாள் உபாத்யாய மார்க்கத்தில் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைமை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கிருந்து ராஜ்காட்டில் உள்ள ராஷ்ட்ரிய ஸ்மிருதி ஸ்தலத்துக்கு இறுதி ஊர்வலம் பிற்பகல் ஒரு மணியளவில் தொடங்கும்.

52 வயதான யோகேஷ் குமார் உத்தராகண்டின் உத்தரகாசியிலிருந்து ஒரு குழுவாக டெல்லி வந்துள்ளார். ஒரே இரவில் 500 கிமீ தூரம் பயணம் செய்து தங்கள் தலைவரது முகத்தை இறுதியாக ஒரு முறை பார்த்து விடைகொடுக்க இவர்கள் வந்துள்ளனர்.

"1984இல் வாஜ்பாய், கங்கோத்ரி செல்லும் வழியில் உத்தரகாசிக்கு வந்தபோது அவரை நான் சந்தித்துள்ளேன். பின்னர் 1986இல் மீண்டும் ஒரு முறை அவர் உத்தரகாசிக்கு வந்தார்" என்று யோகேஷ் குமார் கையில் வாஜ்பாய் படத்தைப் பிடித்தபடி தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

"தலைவருக்காக நான் கங்கோத்ரியின் கங்காஜலமும் கொண்டுவந்துள்ளேன்" என்று எப்படியாவது அவரைப் பார்த்துவிடும் நம்பிக்கையில் யோகேஷ் தெரிவித்தார்.

இதேபோன்று இருபதுகளில் இருந்த ஒரு வாலிபரும் பீகாரிலிருந்து வாஜ்பாயைக் காண இரவோடு இரவாக தில்லி வந்திருந்தார். அவர் "நாடு ஒரு மாபெரும் தலைவனை இழந்துவிட்டது" என்று கூறினார்.

.