This Article is From Apr 05, 2019

நோட்டா-வுக்கு அதிகரிக்கும் ஆதரவு… அச்சத்தில் கட்சிகள்… ஸ்பெஷல் ரிப்போர்ட்!

ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடக்கும். மக்களவைத் தேர்தலின் முடிவுகள், மே 23 ஆம் தேதி அறிவிக்கப்படும். 

நோட்டா-வுக்கு அதிகரிக்கும் ஆதரவு… அச்சத்தில் கட்சிகள்… ஸ்பெஷல் ரிப்போர்ட்!

2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நோட்டாவுக்கு மொத்தமாக 1.08 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.

ஹைலைட்ஸ்

  • யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றால் நோட்டா-வில் ஓட்டு போடலாம்
  • 2014-ல், நோட்டாவுக்கு 60 லட்சம் வாக்குகள் பதிவாகின
  • தேர்தலின் வெற்றியை மாற்றும் தன்மை நோட்டாவுக்கு இருப்பதாக தெரிகிறது

நோட்டா… இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலின் போது கட்சிகள் அச்சப்படும் இன்னொரு எதிரி. 2013 ஆம் ஆண்டு நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, தொடர்ந்து அதற்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்த ஆதரவு பல அரசியல் கட்சிகளுக்கு அச்சத்தைக் கொடுத்துள்ளது.

நோட்டாவில் வாக்கு அளிப்பதன் மூலம் ஒரு தேர்தலின் தாக்கத்தைப் பெருமளவு மாற்றிவிட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எப்படி இருந்தாலும், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீதும் ஒரு குடிமகன் அதிருப்தி கொண்டிருக்கும் போது, நோட்டாவுக்கு ஓட்டு போட்டு தனது எதிர்ப்பைப் பதிவ செய்யலாம்.

விவசாயப் பிரச்னை, கிராமப்புற பிரச்னை, வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால், தேசிய அளவில் பலர் அரசியல் கட்சிகள் மீது அதிருப்தியில் உள்ளனர். அவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் இந்த முறை நோட்டாவில் வாக்களிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. 

pnolmkf

2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நோட்டாவுக்கு மொத்தமாக 1.08 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலின்போதும் நோட்டாவின் தாக்கம் அதிகம். மத்திய பிரதேசத்தில் 23 தொகுதியிலும், ராஜஸ்தானில் 16 தொகுதியிலும் நோட்டாவுக்குப் பதிவான வாக்குகளை விட வெற்றி பெற்றவருக்கும் தோல்வியடைந்தவருக்குமான வாக்கு வித்தியாசம் குறைவு. இப்படி தேர்தலில் நேரடி தாக்கத்தை நோட்டாவால் ஏற்படுத்த முடியும் என்கின்ற சூழல் இன்று வந்துள்ளது. 

இதை சரிகட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள், நோட்டாவுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர். இது குறித்து ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராஜிவ் துலி, ‘நோட்டா, ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லாமல் செய்துவிடும் அபாயம் உள்ளது. இதனால், 100 சதவிகித ஓட்டு பதிவாக வேண்டும் என்றும் நோட்டாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்கக் கூடாது என்றும் பிரசாரம் செய்து வருகிறோம்' என்றார். 

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலாவும், ‘நோட்டாவுக்கு எதிராக எங்கள் கட்சித் தொண்டர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். நோட்டாவுக்கு ஓட்டுப் போடுவதால், இந்திய மக்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது' என்று கருத்து கூறியுள்ளார். 

ஆனால் ஒடிசாவைச் சேர்ந்த ஒரு விவசாய சங்கம், ‘நோட்டாவுக்கு ஓட்டுப் போட வேண்டும்' என்பதை வலியுறுத்தி வருகிறது. இப்படி நோட்டாவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் தொடர்ந்து பரப்புரை நிகழ்த்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்தலில் நோட்டாவின் தாக்கம் நேரடியாக முடிவுகளில் பிரதிபலிக்கும் என்று தெரிகிறது. 

ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடக்கும். மக்களவைத் தேர்தலின் முடிவுகள், மே 23 ஆம் தேதி அறிவிக்கப்படும். 


 

.