This Article is From Nov 01, 2019

’என்னை முதல்வராக்குங்கள்’: மகாராஷ்டிரா ஆளுநருக்கு விவசாயி கடிதம்!

மிகுந்த மன அழுத்தத்தில் உள்ள விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க செயல்படும் ஒரு அரசு உடனடியாக தேவை என அந்த விவசாயி கூறியுள்ளார்.

’என்னை முதல்வராக்குங்கள்’: மகாராஷ்டிரா ஆளுநருக்கு விவசாயி கடிதம்!

50:50 அதிகாரப் பகிர்வு முடிவில் இருந்த பின்வாங்க முடியாது என சிவசேனா பிடிவாதமாக இருந்து வருகிறது.

Mumbai:

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக - சிவசேனா கட்சிகளிடையே அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதில் தொடர்ந்து இழுபறி நிலவி வரும் நிலையில், விவசாயி ஒருவர் இரு கட்சிகளும் பிரச்சினையை தீர்க்கும் வரை தன்னை முதல்வராக்குங்கள் என ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஸ்ரீகாந்த் காட்லே என்ற விவசாயி எழுதியுள்ள அந்த கடிதத்தில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்த பருமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் முழுமையாக சேதம் அடைந்துள்ளன. இதனால், மிகுந்த மன அழுத்தத்தில் உள்ள விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க செயல்படும் ஒரு அரசு உடனடியாக தேவை. 

மாநிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களை இயற்கை பேரழிவு (பருவமழை) நாசம் செய்ததது. இந்த பேரழிவால் விவசாயிகள் மிகுந்த பதற்றமடைந்துள்ளனர். இப்படி விவசாயிகள் பாதிப்படைந்துள்ள இந்த சூழ்நிலையில், சிவசேனாவும் - பாஜகவும் யார் முதலமைச்சராக இருப்பது என்பது தொடர்பான பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவராமல் இழுத்துக்கொண்டே செல்கின்றனர். 

இவர்களின் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் வரை ஆளுநர், முதல்வர் பதவியை எனக்கு வழங்க வேண்டும் என்று விவசாயி ஸ்ரீகாந்த் காட்லே கூறியுள்ளார். மேலும், நான் விவாசியகளின் பிரச்சினையை தீர்த்து வைத்து அவர்களுக்கு உரிய நீதி வழங்குவேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 


50 சதவீத அதிகாரப்பகிர்வு, 2.5 வருடத்துக்கு சிவ சேனை முதல்வர், அமைச்சரவையில் சரிபாதி இடங்கள் என்ற திட்டத்தை சிவசேனா முன் வைத்துள்ளது. “லோக்சபா தேர்தலுக்கு முன்னர் 50:50 அதிகாரப் பகிர்வுக்கு அமித்ஷா ஒப்புக் கொண்டதாக சிவசேனா கட்சி கூறிவருகிறது. 

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா, மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸ்தான், முதல்வராக தொடர வேண்டும் என்று கருதுகிறார்கள். சிவசேனாவின் நிலைப்பாட்டுக்கு எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் சரத் பவார், ‘சிவசேனாவின் நிபந்தனையில் எந்த தவறும் இல்லை,' என்றுள்ளார். 

இந்நிலையில், சிவசேனாவின் முக்கிய தலைவர் சஞ்சய் ராவத் நேற்று மாலை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், இது தீபாவளி பண்டிகையை ஒட்டிய மரியாதை நிமித்தமான சந்திப்பு தான், வேறு எதுவும் இல்லை என்றும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிர தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி, மொத்தம் இருக்கும் 288 தொகுதிகளில் 161-ஐக் கைப்பற்றின. பாஜக, 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா, 56 இடங்களில் வெற்றியடைந்தது. தேசியவாத காங்கிரஸ் தேர்தலில், 54 இடங்களையும், காங்கிரஸ், 44 இடங்களையும் வென்றன. 

(With inputs from ANI)

.