This Article is From Nov 28, 2018

மத்திய பிரதேசம் மற்றும் மிசோரமில் வாக்குப்பதிவு தொடங்கியது

Election: டிசம்பர் 11-ம்தேதி ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

Madhya Pradesh, Mizoram Election 2018: மத்திய பிரதேச தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன

New Delhi:

தேர்தல் களத்தை பொறுத்தவரையில் நாட்டின் முக்கிய மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இங்கு மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. கடந்த சில வாரங்களாக தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்தது. இந்த நிலையில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது.

இதேபோன்று மலைப்பகுதி மாநிலமான மிசோரமிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் மிசோரமில் மட்டும்தான் காங்கிரசின் ஆட்சி உள்ளது. மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை 4-வது முறையாக முதல்வர் ஆகும் முயற்சியில் பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் தீவிரம் காட்டியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு எதிராக வீசும் இயல்பான அலை காரணமாக முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக அமையலாம்.

மத்திய பிரதேசம், மிசோரம் தேர்தல் தொடர்பான 10 தகவல்கள்

  1. மத்திய பிரதேசத்தில் கடந்த 1990-ல் இருந்தே பாஜக ஆட்சிதான். கடந்த 2005-ல் இருந்து சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக இருந்து வருகிறார். மாநிலத்தின் மொத்த வளர்ச்சி 10 சதவீதம், விவசாய வளர்ச்சி 5 சதவீதம், தனிநபர் வருமானம் 5 மடங்கு உயர்ந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
  2. ஆட்சிக்கு ஆதரவான அலை வீசுவதாக சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரசாரம் செய்திருக்கின்றனர்.
  3. மாயாவதியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தவறி விட்டது. ஒருவேளை அமைந்திருந்தால் பெரும்பான்மையான தலித் ஓட்டுகள் இந்த கூட்டணிக்கு கிடைத்திருக்கும். 2013 தேர்தல் தகவல்களின்படி இந்த கூட்டணி அமைக்கப்பட்டிருந்தால் அதற்கு 41 இடங்கள் கூடுதலாக வெற்றி கிடைத்திருக்கும்.
  4. சட்டசபை தேர்தல்களில் காங்கிரசுடன் மாயாவதி கூட்டணி வைக்கவில்லை. அவர் கேட்ட தொகுதிகள், அவற்றின் எண்ணிக்கை காரணமாக கூட்டணி அமையவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் என்.டி.டீ.வி.-க்கு தெரிவித்தார்.
  5. மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு கமல்நாத், திக் விஜய் சிங், ஜோதிராதித்ய சிந்தியா என 3 பவர் சென்டர்கள் உள்ளனர். கமலுக்கு தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பு. திக் விஜயும், சிந்தியாவும் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.
  6. தேர்தலையொட்டி மத்திய பிரதேச மக்களுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியிருக்கிறார். அதில் பல ஆண்டுகளாக விவசாயிகள் பிரச்னை, பெண்களுக்கு எதிரான குற்றம், வியாபம் போன்ற ஊழல்கள் நடந்திருக்கிறது. வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. எனவே காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
  7. தேர்தல் கணிப்பாளரான சஷாங்க் சுக்லா, பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே 2.8 சதவீதம் அளவுக்கு வாக்கு வித்தியாசம் இருக்கும் என்று கூறியுள்ளார். தேர்தலுக்கு முந்தைய கணிப்புகள், பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கின்றன. பாஜக 116 இடங்களிலும், காங்கிரஸ் 102 இடங்களிலும் வெற்றி பெறக்கூடும்.
  8. மிசோரம் மாநிலத்தில் லால் தன்வாலா முதல்வராக உள்ளார். ஏற்கனவே 2 முறை அவர் முதல்வராக இருந்திருக்கிறார். இப்போது 3-முறைக்கு முயற்சி செய்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரசின் ஆட்சி இருக்கும் ஒரே மாநிலம் மிசோரம். இங்கு காங்கிரசும், எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணியும் மொத்தம் உள்ள 40 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பாஜக சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 39 தொகுதிகளில் களம் கண்டுள்ளது.
  9. முழு மாநிலமாக மிசோரம் கடந்த 1987-ல் அங்கீகரிக்கப்பட்டது. அதன் பின்னர் காங்கிரசும், மிசோரம் தேசிய கட்சியும் மாறி மாறி அட்சியில் இருந்தன. 2013-ல் காங்கிரஸ் கட்சி 34 இடங்களில் வெற்றி பெற்றது. மிசோ தேசிய முன்னணி 5 இடங்களில் வென்றது.
  10. மத்திய பிரதேசம், மிசோரம் மாநில தேர்தல் முடிவுகள் டிசம்பர் 11-ம் தேதி அறிவிக்கப்படுகின்றன. அவற்றுடன் ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மாநில முடிவுகளும் அன்றைய தினம் வெளியாகிறது.
.