This Article is From Dec 19, 2019

‘சேற்றில்தான் தாமரை மலரும்’ – சட்டமன்ற உரையில் பால்தாக்கரே பேரன் அதிரடி!!

விவசாயிகள் தற்கொலை, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆதித்யா தாக்கரே மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசினார். அவரை உரை 11 நிமிடங்கள் நீடித்தது.

‘சேற்றில்தான் தாமரை மலரும்’ – சட்டமன்ற உரையில் பால்தாக்கரே பேரன் அதிரடி!!

தனது முதல் சட்டமன்ற பேச்சில் பாஜகவை ஆதித்யா கடுமையாக விமர்சித்துள்ளார்.

Mumbai:

சேற்றில்தான் தாமரை மலரும் என்று சிவசேனா கட்சியின் இளம் தலைவர் ஆதித்யா தாக்கரே பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். அதுவும் தனது முதல் சட்டமன்ற உரையில் அவர் இவ்வாறு தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றன. இந்த முறை சட்டமன்றத்திற்கு சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் பேரன் ரோஹித் பவார், அதிதி தட்காரே உள்ளிட்டோர் முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பால்தாக்கரேவின் பேரனும், ஓர்லி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஆதித்யா தாக்கரே தனது முதல் சட்டமன்ற உரையை பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

மகாராஷ்டிராவில் அரசு ஏற்படுத்தப்படுவதற்கு முன்பாக ஒரு மாதம் அரசியல் நாடகம் நடந்தது. கூட்டணி கட்சிகளுக்கு கடும் தொந்தரவுகள் கொடுக்கப்பட்டன. இருப்பினும், பால்தாக்கரேவின் மகனும் முதல்வருமான உத்தவ் தாக்கரே, சரத் பவார், சோனியா காந்தி ஆகியோர் இந்த ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என முடிவு செய்தனர். இது மகாராஷ்டிராவின் வலிமையை காட்டுகிறது.

முதல் நாளிலேயே எதிர்க்கட்சிகள் இந்த சட்டமன்றத்தில் பிரச்னைகளை எழுப்பினார்கள். மக்கள சொல்வதைப் போல தாமரை என்பது சேற்றில்தான் மலரும். அதுதான் நடந்திருக்கிறது.

விவசாயிகளின் கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம். பருவமழை பொய்க்கும்போது நாட்டில் வறட்சி ஏற்படுகிறது. பருவ நிலை மாற்றத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காற்று மாசுபாடு, பருவநிலை மாற்றம் குறித்து நாம் ஆலோசனை நடத்த வேண்டும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகளை நாம் பல இடங்களில் காணப்படுகிறது. ஒரு தகவலில் மும்பை 2050-ல் மூழ்கி விடும் என்று கூறப்பட்டிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வேலை வாய்ப்பின்மை என்பது மிகப்பெரிய பிரச்னை. 2016-ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது என்ன நடந்தது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அதைப் பற்றி யாரும் பேச தயாரில்லை. எதிர்க்கட்சியான பாஜக கூட இதுபற்றி விவாதிக்க வருந்துகிறது. இந்த நடவடிக்கையை கொண்டு வர வேண்டாம் என்று நாங்கள் அறிவுறத்தினோம். ஆனால் பாஜக அரசு பணமதிப்பிழப்பையும், ஜி.எஸ்.டி.யையும் கொண்டு வந்தது. இதனால் தொழில்துறை மட்டுமல்லாமல் வேளாண்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த கூட்டணி எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலிலும் பாஜகவுக்கு வெற்றி கிடைக்க விடாமல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நடந்து முடிந்த மகாராஷ்டிர தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றது. 288 உறுப்பினர்கள் கொண்ட இந்த அவையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதற்கிடையே அதிகாரத்தில் பாதிப்பங்கு தர மறுப்பதாக கூறி பாஜக கூட்டணியை சிவசேனா உதறித்தள்ளியது.

அக்கட்சிக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு அளிக்க கடந்த மாதம் 28-ம்தேதி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் கூட்டணி அரசு அமைக்கப்பட்டது.

.