This Article is From Jun 23, 2018

ஓய்வு பெற்றார் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஜஸ்டி செலமேஸ்வர்

மூத்த நீதிபதி ஜஸ்டி செலமேஸ்வர் அவர்களின் ஓய்வுக்கு பிறகு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அக்டோபர் 2ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்

ஓய்வு பெற்றார் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஜஸ்டி செலமேஸ்வர்
New Delhi: புது தில்லி: உத்திரகாண்ட் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் அவர்களின் பெயர், உச்சநீதிமன்ற நீதிபதி பரிந்துரை பட்டியலில் இருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஜஸ்டி செலமேஸ்வர் அவர்களின் வயது முதிர்வு ஓய்வு காரணத்தால் ஜோசப்பின் பதவி உயர்வு தாமதமாகலாம் என தெரிகிறது.

உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மூத்த நீதிபதிகள் ஜஸ்டி செலமேஸ்வர், எம்.பி.லோகூர், ரஞ்சன் கோகாய் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் உள்ளனர். கடந்த மே 11ம் தேதி, கே.எம்.ஜோசப் பெயரை பரிந்துரை செய்ய கொலிஜியம் முடிவு செய்தது. ஆனால், அதற்கான தேதி முடிவு செய்யப்படாமலே இருந்தது. மே 16ம் தேதி நடந்த அடுத்த கட்ட கூட்டத்தில் ‘இன்னும் தீவிரமாக விவாதித்து, பரந்த அடிப்படையில் பெயர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்’ என சொல்லி இது தொடர்பான முடிவு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஜஸ்டி செலமேஸ்வர் அவர்களின் ஓய்வினால், அனுபவம் மற்றும் பணிமூப்பு அடிப்படையில் ஆறாவது இடத்தில் இருந்த நீதிபதி ஏ.கே.சிக்ரி தற்பொழுது கொலிஜியத்தின் ஐந்து உறுப்பினர்களில் ஒருவர் ஆகியிருப்பதால், கே.எம்.ஜோசப் பெயரை பரிந்துரைப்பது குறித்து முற்றிலும் புதிய மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீதிபதி கே.எம்.ஜோசப்பின் பணிமூப்பு குறித்து மத்திய ஏரசு ஏற்கனவே கேள்வி எழுப்பியுள்ளதால், அவரது பதவி உயர்வு கேள்விக்குள்ளாகியுள்ளது.

மூத்த நீதிபதிகள் ஜஸ்டி செலமேஸ்வர் மற்றும் குரியன் ஜோசப் இருவருமே தலைமை நீதிபதிக்கும் மற்ற மூத்த நீதிபதிகளுக்கும் கே.எம்.ஜோசப்பின் பதவி உயர்வு குறித்த பரிந்துரை பற்றி விரிவாக கடிதம் எழுதியுள்ளனர்.

தற்போதைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி, குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷ் ரெட்டி, கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆகியோரது பெயர்கள் கொலிஜியத்தின் பரிந்துரை பட்டியலில் இருப்பதாக தெரிகிறது.

மூத்த நீதிபதி ஜஸ்டி செலமேஸ்வர் அவர்களின் ஓய்வுக்கு பிறகு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அக்டோபர் 2ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அவரை தொடர்ந்து மூத்த நீதிபதி குரியன் ஜோசப் நவம்பர் மாதத்திலும், எம்.பி.லோகூர் டிசம்பர் மாதத்திலும் ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.
.