This Article is From Aug 19, 2018

கேரளாவில் மிக கனமழை முடிவுக்கு வந்தது ; மீட்பு பணிகள் தீவிரம்

ஆகஸ்ட் 8 முதல் பெய்து வரும் பேய்மழையால் கேரளத்தில் இதுவரை 300 பேர் பலியாகி உள்ளனர்

இலட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Thiruvananthapuram:

ஆகஸ்ட் 8 முதல் பெய்து வரும் பேய்மழையால் கேரளத்தில் இதுவரை 300 பேர் பலியாகி உள்ளனர். ஆறு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் 3000 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடும் மழைக்கு இடையே மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டர்களும் படகுகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கேரளாவில் பெய்து வந்த மிக கனமழை முடிவுக்கு வந்துள்ளதாக ஏஎன்ஐ செய்து நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரில் மூழ்கிய கிராமங்களையும் வயல்வெளிகளையும் ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் சார்பில் உடனடி நிதியாக 500 கோடி அறிவித்துள்ளார். மேலும் கூடுதலாக ஹெலிகாப்டர்கள், படகுகள், இதர உபகரணங்களை வழங்கவும் அவர் உறுதியளித்தார்.

இதைப் பற்றிய பத்து முக்கியக் குறிப்புகள்:

1. நீரில் மூழ்கிய கிராமங்களையும் வயல்வெளிகளையும் ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் சார்பில் உடனடி நிதியாக 500 கோடி அறிவித்துள்ளார். மேலும் கூடுதலாக ஹெலிகாப்டர்கள், படகுகள், இதர உபகரணங்களை வழங்கவும் அவர் உறுதியளித்தார். ஆனால் கடந்த நூறாண்டுகளில் இல்லாத மோசமான வெள்ளத்தால் கேரளம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள கேரள முதல்வர் பிணராயி விஜயன் உடனடி நிதியாக குறைந்தபட்சம் 2000 கோடி தேவை என்று கூறியுள்ளார்.

2. இராணுவம், வான்படை, கடற்படை, கடலோரக் காவற்படை ஆகியவையும் இவற்றுடன் மொத்தம் 38 ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

3. கேரளாவில் பெய்து வந்த மிக கனமழை குறைந்துள்ளதால், வரும் திங்கட்கிழமை முதல் கடற்படை விமானங்கள் பயணிகள் பயன்படுத்த இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

4. மக்கள் ஆயிரக்கணக்கில் வீட்டு மாடிகளில் சிக்கி உதவிக்குக் காத்திருக்கின்றனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மீட்புப் படையினர் இன்னும் சென்று சேராத பல பகுதிகளும் உள்ளன. சில பகுதிகள் மிகவும் குறுகலாக இருப்பதால் மீட்புப் படகுகள் செல்லமுடியவில்லை.

5. சமுதாயக் கூடங்கள், பள்ளிக் கலையரங்கங்கள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மழையால் ஒதுங்கியுள்ளனர். இங்கு போதுமான கழிப்பிட வசதிகள் இன்றி அவர்கள் தவித்து வருகின்றனர். நிவாரண முகாம்களில் உள்ள சிலருக்கு உணவு, தண்ணீர் கிடைப்பதும் பிரச்சினை ஆகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்களில், திறந்திருக்கும் கடைகளில் புகுந்து மக்கள் உணவைப் பிடுங்கிச் செல்கின்றனர்.

6. உணவு, குடிநீர் ஆகியவை ஹெலிகாப்டர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அரிசி, குடிநீர் அடங்கிய சிறப்பு இரயில்களும் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கொச்சி விமான நிலையத்தில் வெள்ளம் இன்னும் வடியாததால், தற்காலிகமாக கடற்படையின் திட்டில் இருந்து பயணிகள் விமானம் திங்கள் முதல் இயக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

7. மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மாநிலத்தின் பல அணைகளிலும் நீர் திறந்துவிடப்பட்டு பல கிராமங்கள் வெள்ளக்காடாகியுள்ளன.
8. குறிப்பாக திருவனந்தபுரத்திலிருந்து வடக்கே 120 கிமீ தொலைவில் உள்ள செங்கன்னூர் அபாயத்தில் உள்ளது. நான்கு நாட்களாக தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இப்பகுதியை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

9. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமரைக் கோரியுள்ளார். “கேரள மக்கள் கஷ்டப்பட்டு வரும் இந்நேரத்தில் முடிவை அறிவிப்பதில் தாமதமோ குழப்பமோ கூடாது” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

10. மலையாளிகள் பலர் பணிபுரிந்து வரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷேக் முகம்மது பின் அல் மக்தூம் கேரளத்துக்கு அவசரகால ரீதியில் உதவ ஒரு குழுவை அமைத்துள்ளார். “மலையாளிகள் எங்கள் வெற்றியில் எப்போதுமே முக்கியப் பங்காற்றுபவர்கள்” என்று நெகிழ்ச்சியுடன் கூறி அவர் இவ்வுதவியை அறிவித்துள்ளார்.

.