கேரளாவில் ஆகஸ்ட் 8 முதலாக பெய்து வரும் பேய்மழை, நிலச்சரிவுகளில் பலியானோர் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது. 1924 முதல் பதிவானதில் இரண்டாவது மிக மோசமான மழைப்பொழிவாக இது பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 'கேரளம் இதுவரை சந்தித்திராத நெருக்கடியை சந்தித்து வருகிறது என்று கூறி, நூறு கோடி நிவாரணத்தொகையினை அறிவித்துள்ளார்.
குறைந்தது பத்து மாவட்டங்கள் மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவற்றைச் சீரமைக்கும் பணிகள் அவ்வளவு எளிதான காரியமாக இருக்கப்போவதில்லை. மாநிலத்தின் 27 அணைகள் நிரம்பியதை அடுத்து அவற்றிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆகஸ்ட் 15வரை மிகக் கடுமையான மழையில் இருந்து ஓரளவு கடுமையான மழைப்பொழிவு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா சந்தித்து வரும் வரலாறு காணாத மழைவெள்ளம் பற்றிய சில கூடுதல் தகவல்கள்:
தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினைச் சேர்ந்த 404 வீரர்கள் 14 அணிகளாகப் பிரிந்து மழையினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள திருச்சூர், எர்ணாகுளம், கோழிக்கோடு, இடுக்கி, வயநாடு, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 31 படகுகளும் இப்பணியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கேரளத்திலும் தமிழ்நாடு, கர்நாடகாவின் சில பகுதிகளிலும் ஆகஸ்ட் 15 வரை பலத்த மழையில் இருந்து ஓரளவு பலத்த மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கேரளாவில் இதுவரை மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.