This Article is From May 27, 2020

முன்னறிவிப்பின்றி இயக்கப்படும் ரயில்கள்! எதிர்க்கும் கேரளம்!!

இந்த நடவடிக்கையானது தொற்றினை கையாள்வதில் குழப்பத்தினை ஏற்படுத்தி தொற்றை அதிகரிக்க வழிவகை செய்யும் என மாநில முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முன்னறிவிப்பின்றி இயக்கப்படும் ரயில்கள்! எதிர்க்கும் கேரளம்!!

கேரளாவை தொற்று பரவல் மையமாக மாற்ற ரயில்வே முயல்வதாக கேரள அமைச்சர் ஐசக் குற்றம்சாட்டியுள்ளார்

Thiruvananthapuram:

தேசிய அளவில் கொரோனா தொற்றால் 1.45 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், மற்ற மாநிலங்களை காட்டிலும் கேரளம் தொற்றை கட்டுப்படுத்துவதில் சிறந்து விளங்கி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு ரயில்களை முன் அறிவிப்பின்றி மாநிலத்திற்கு அனுப்புவதாக கேரளம் குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக மகாராஷ்டிராவும் ரயில் இயக்கம் குறித்த விமர்சனத்தை மத்திய அரசின் மீது முன் வைத்திருந்தது.

இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் கேரளம் தொற்றை கட்டுப்படுத்துவதில் சிறந்து விளங்குவதாக சர்வதேச அளவில் பாராட்டினை பெற்றிருந்தது. இந்நிலையில், மத்திய அரசானது முன் அறிவிப்பின்றி மாநிலத்திற்கு சிறப்பு ரயில்களை அனுப்புகிறது என்றும், இந்த நடவடிக்கையானது தொற்றினை கையாள்வதில் குழப்பத்தினை ஏற்படுத்தி தொற்றை அதிகரிக்க வழிவகை செய்யும் என மாநில முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கேரளாவின் நிதியமைச்சர் ஐசக், “ரயில்வே துறை கேரளாவை தொற்று பரவல் மையமாக மாற்ற விரும்புகிறது” என குற்றம் சாட்டியுள்ளார்.

 தற்போது கேரளாவில் 963 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் இருந்து திரும்பிய 72 பேர், தமிழகத்திலிருந்து திரும்பிய 71 பேர் மற்றும் கர்நாடகத்திலிருந்து திரும்பிய 35 பேரும் உள்ளடங்குவர். நேற்று 67 பேர்  தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக புதியதாக கண்டறியப்பட்டனர். இந்த 67 பேரில் 27 பேர் வெளிநாடுகளிலிருந்து திருப்பியவர்கள் மற்றும் 33 பேர் வேறு மாநிலங்களிலிருந்து கேரளாவிற்கு திரும்பியவர்களாவார்கள்.

கேரள மக்கள் மீண்டும் கேரளத்திற்கு திரும்புவதற்கு எவ்வித ஆட்சேபனையும் கிடையாது. ஆனால், மத்திய அரசு திட்டமிடாத மற்றும் முன்னறிவிப்பு இல்லாத போக்குவரத்தினை இயக்கும் போது அது தொற்று பரவலுக்கு வித்திட்டும் என விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

“முன்னதாக மும்பையிலிருந்து ஒரு ரயில் கேரளாவிற்கு அறிவிக்கப்படாமல் இயக்கப்பட்டது. இந்த நடைமுறையானது தொற்று பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறியதாக உள்ளது. இது குறித்து ரயில்வே அமைச்சரிடம் பேசினேன். இதன் பின்னரும் மீண்டும் ஒரு ரயில் திட்டமிடாமல் இயக்குவதற்கு ரயில்வே தயாரானது. இம்மாதிரியான நடைமுறைகள், மாநில அரசுகள் தொற்றை கட்டுப்படுத்த மேற்கொண்டுள்ள முயற்சிகளை நீர்த்துப்போக செய்வதாக உள்ளது. இது குறித்து பிரதமரிடம் குறிப்பிட்டுள்ளேன்“ என விஜயன் கூறியுள்ளார்.

திட்டமிட்டு வரும் பயணிகள் மற்றும் சிறப்பு ரயில்களில் உள்ள பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பயணிகளின் பட்டியல்கள் தங்களிடம் முன்கூட்டியே தயார் நிலையில் இருக்கும் என்றும், அதன்படி பயணிகள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் விஜயன் கூறியுள்ளார். ஆனால், முன்னறிவிப்பின்றி ரயில்கள் இயக்கப்படுவதன்  மூலமாக பொது சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை கட்டமைப்புகளை மத்திய அரசு தகர்த்த விரும்புவதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே போல மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பிரச்சனை அரசியல் பிரச்சனையாக முன்னெழுந்துள்ளது. அம்மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “உத்தவ் தாக்ரே அரசு தொற்றை தடுக்க தவறிவிட்டது“ என குற்றம்சாட்டி வருகிறார். தங்கள் மாநிலத்திற்கு போதுமான ரயில்களை மத்திய அரசு இயக்கவில்லை என மகாராஷ்டிரா விமர்சித்துள்ளது. ஆனால், போதுமான பயணிகள் இல்லாததால்தான் ரயில்கள் இயக்கப்படவில்லை என மத்திய அரசு  தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் பலர் குவிந்துள்ளனர்.

.