கேரளத்தின் முதல் ‘மகளிர் மட்டும்’ படைப்பிரிவு

பயிற்சியின் இறுதி அணிவகுப்பில் பங்குப்பெற்ற முதலமைச்சர் பிணராய் விஜயன் வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியதையை ஏற்றார்.

கேரளத்தின் முதல் ‘மகளிர் மட்டும்’ படைப்பிரிவு
Thrissur:

காஷ்மீரில் சி ஆர் பி ஏப் தனது மகளிர் படையணியை நிறுவ முடிவெடுத்திருக்கும் நேரத்தில், கேரள அரசு தனது முதல் மகளிர் மட்டும் படைப்பிரிவினை பணியமர்த்த முடிவு செய்துள்ளது. மொத்தம் 578 பேர் கொண்ட இக்குழுவில் 40 வீராங்கனைகள் கொண்ட கமாண்டோ அணியும் அடக்கம்.

பயிற்சியின் இறுதிநாள் அணிவகுப்பில், கேரள முதலமைச்சர் பிணராய் விஜயன் கலந்துகொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்பு விழாவில் பேசுகையில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள படையினர் மதச்சார்பின்மைக்காகவும் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடவேண்டுமென்று வலியுறுத்தினார்.

கேரள அரசு பல தளங்களில் பாலின சமத்துவத்திற்கான முயற்சிகளை எடுத்துக்கொண்டிருப்பதாகவும், அதில் ஒரு பகுதியாக கேரள காவல் துறையில் 25 சதவீதம் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் இருத்தல் அவசியம் என்றும் கூறினார். மேலும், தற்போது அத்துறையில் 15 சதவீதம் மட்டுமே பெண்கள் பணியில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

சிறப்பு பணிநியமன நடவடிக்கைகள் மூலம், பெண்கள் காவல் பணியில் சேர்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கேரள அரசு, 2017ல் மகளிர் மட்டும் படைப்பிரிவினை துவங்குவதற்கான செய்தியினை வெளியிட்டது. கடந்த செப்டம்பர் மாதத்தில் அதற்கான பணிகளையும் பயிற்சித் திட்டங்களையும் வகுக்க ஆரம்பித்தது.

அடிப்படைப் பயிற்சிகளைத் தாண்டி, இப்படையினருக்கு களரிப்பயற்று, நீச்சல், கராத்தே, யோகா, கணினி, தொடர்பாடல் உள்ளிட்ட மென்திறன்கள், காட்டுப் பகுதிகளில் செயல்படுதல், பெண்கள், குழந்தைகள், மற்றும் மாற்றுப்பாலினத்தவர் குறித்த சமூக பிரச்சனைகளைக் கையாளுதல் என பலவகைத் திறன் மேன்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

பெண்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் விதமாக, அனைத்துப் பஞ்சாயத்துக்களிலும் ’நிர்பயா’ தன்னார்வலர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இது ஒருபுறமிருக்க, காஷ்மீரில் 500 சிறப்பு மகளிர் சி ஆர் பி எப் படையினர் பாதுகாப்புக்காக நியம்மிக்கப்பட்டுள்ளனர். துணை இராணுவப் படை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “உரிய பயிற்சிகளுக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் போராட்டத்தில் ஈடுபடுவோர், கல் எறிவோர், குறிப்பாகப் பெண்களைக் கட்டுப்படுத்தும் பணியில் இவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்” எனத் தெரிவித்தார்.