This Article is From Aug 16, 2018

வெளுத்து வாங்கும் மழை: கொச்சியில் மெட்ரோ ரயில் இயக்கமும் முடங்கியது!

கேரளாவில் விடாது பெய்து வரும் கனமழையால், மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயக்கமும் பாதிப்படைந்துள்ளன

Kochi:

கேரளாவில் விடாது பெய்து வரும் கனமழையால், கொச்சி விமான நிலையத்திலிருந்து விமானங்கள் இயக்கம் நிறுத்தவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயக்கமும் பாதிப்படைந்துள்ளன.

முல்லை பெரியாறு, செருதோனி, இடுக்கி, இடமலையார் ஆகிய அணைகளிலிருந்து தொடர்ச்சியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன. மேலும், பெரியாறு ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கேரள மாநிலத்தில் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளப் பெருக்கு கொச்சி நகரத்தில் வசித்து வரும் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது.

‘அங்கமாலிக்கும் அலுவாவுக்கும் இடையில் உள்ள பாலம் 176-ல் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளதால், அந்த வழியாக செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன’ என்று தெற்கு ரயில்வே செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

அதேபோல கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனமும், இன்று காலை முதல் தனது ரயில் சேவைகளை ரத்து செய்துள்ளன. ‘முட்டோம் பகுதிக்கு அருகில் தண்ணீர் அளவு அதிகரித்ததால், கொச்சியில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன’ என்று கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

‘மீண்டும் தண்ணீர் அளவு கீழே வந்து, எல்லா விஷயங்களும் சரிவர இருக்கிறது என்று தெரிந்த பின்னர்தான், மெட்ரோ ரயில் இயக்கப்படும்’ என்று கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், கொச்சிக்குப் போகும் தேசிய நெடுஞ்சாலையின் கலமேசரி பகுதி வெள்ள நீரால் மூழ்கியது. இதனால் பேருந்துகள் இயக்குவதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

நேற்று அதிகாலை கொச்சி விமான நிலையத்தில் மழை நீர் புகுந்ததால், விமானம் இயக்குதல் நிறுத்திவைக்கப்பட்டது.இது குறித்து கொச்சி விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் பேசும்போது, ‘விமான நிலையத்துக்குள் மழை நீர் புகுந்ததால், விமானங்கள் இயக்குதலை நிறுத்தி வைத்துள்ளோம். வரும் சனிக்கிழமை மதியம் 2 மணி வரை, விமானங்கள் இயக்கப்படாது. வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்’ என்று தகவல் தெரிவித்துள்ளார்.

.