This Article is From Aug 28, 2018

கேரள வெள்ளம்: ஓணம் விடுமுறை முடிந்து கேரளத்தில் நாளை பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு

கேரளாவில் ஓணம் விடுமுறைகள் முடிந்து பள்ளி, கல்லூரிகள் நாளை திறக்கப்பட உள்ளன.

கேரள வெள்ளம்: ஓணம் விடுமுறை முடிந்து கேரளத்தில் நாளை பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு

வெள்ளத்தால் சேதமடைந்த புத்தகங்கள், மேசை-நாற்காலிகள், கற்றல் கருவிகள்.

New Delhi:

“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் ஓணம் விடுமுறைகள் முடிந்து பள்ளி, கல்லூரிகள் நாளை திறக்கப்பட உள்ளன. வெள்ளத்தால் வகுப்பறைகள் சேதமடைந்த கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் இதில் விலக்கு வழங்கப்படுகிறது. இதுகுறித்த முடிவுகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எடுத்துக்கொள்ளலாம்” என்று கேரள கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் கூறியுள்ளதாக மாத்ருபூமி செய்தி வெளியிட்டுள்ளது.

“வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த பல பள்ளிகளில் நிலைமை சீரடைந்துள்ளது. எனினும் ஒரு சில பள்ளிகள் சேதமடைந்த நிலையில் இருப்பதால் அவை குறித்து கலெக்டர்களே முடிவெடுத்துக்கொள்ளலாம்” என கேரள மேல்நிலைக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் என்டிடிவி-யிடம் தெரிவித்துள்ளார்.

“ஓணத்தை ஒட்டி நடைபெறும் தேர்வுகள் தற்போதைக்கு நடைபெறாது. ஆகஸ்ட் தொடக்கத்தில் தொடங்க இருந்த பல இடைப்பருவத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுகின்றன. இதுகுறித்த பின்னர் முடிவெடுக்கப்படும்” என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

“98 விழுக்காடு பள்ளிகள் செயல்படும் நிலையில் உள்ளன. வெள்ளத்தால் பாடநூல்களை இழந்த மாணவர்களுக்குப் புதிய புத்தகங்கள் விரைவில் வழங்கப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேலைநாட்களை எப்படி ஈடுகட்டுவது என ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசித்து முடிவு எட்டப்படும்” என்றும் அமைச்சர் ரவீந்திரநாத் கூறியுள்ளார். மேலும் வெள்ள பாதிப்புகளைப் பற்றி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுவது குறித்தும் அரசு ஆலோசித்து வருவதாக அவர் கூறினார்.

இதனிடையே வெள்ளம் முடிந்து பள்ளிகளைச் சுத்தம் செய்யச் சென்ற தன்னார்வலர்கள், அதிகாரிகள், இராணுவ வீரர்கள் சென்றபோது சகதி, மண்மூடிய புத்தகங்கள், உடைந்த மேசை-நாற்காலிகள் ஆகியவற்றைப் பெரும்பாலும் எதிர்கொண்டுள்ளனர். இதனால் வகுப்பறைகள் கல்லறையைப் போல காட்சியளித்ததாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர். பரவூர் அனைவருக்கும் கல்வித் திட்ட அலுவலர் ஜார்ஜ் “கற்பித்தல் கருவிகள், நூலகம், டிஜிட்டல் வகுப்பறைகள் என அனைத்தையும் இழந்துள்ளோம்” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

எனினும் போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கிவிட்டு ஆகஸ்ட் 29 முதல் பள்ளிகளைச் செயல்பட வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

.