This Article is From Sep 06, 2018

சட்டமன்றத்தை கலைத்தார் கே.சி.ஆர் - தெலங்கானாவுக்கு முன்கூட்டியே தேர்தல்

சட்டமன்றம் கலைக்கப்பட்டதால், 2019-ம் ஆண்டு மே மாதம் நடை பெற இருந்த தேர்தல், இந்த ஆண்டு இறுதியில் நடை பெற இருக்கிறது

சட்டமன்றத்தை கலைத்தார் கே.சி.ஆர் - தெலங்கானாவுக்கு முன்கூட்டியே தேர்தல்
Hyderabad:

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், இன்று ஆளுநரைச் சந்தித்து, சட்டமன்றத்தை கலைக்குமாறு கேட்டுக் கொண்டார். அதனை ஆளுநர் நரசிம்மன் ஏற்றுக் கொண்டார். சட்டமன்றம் கலைக்கப்பட்டதால், 2019-ம் ஆண்டு மே மாதம் நடை பெற இருந்த தேர்தல், இந்த ஆண்டு இறுதியில் நடை பெற இருக்கிறது. அது வரையில் சந்திரசேகர ராவ், முதலமைச்சர் பொறுப்பை பார்த்துக் கொள்வார்.

கடந்த இரண்டு வாரங்களாக, ஆட்சியைக் கலைத்து முன் கூட்டியே தேர்தல் கொண்டு வர ராவ் திட்டமிடுவதாக, தகவல் பரவியது. ஞாயிறு அன்று ராவ் தலைமையில் நடந்த பேரணி அந்த எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியது.

தற்போது தங்கள் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடப் போகும் 100 வேட்பாளர்களின் பட்டியலையும் அறிவித்துள்ளார் கே.சி.ஆர். வெள்ளிக் கிழமை தேர்தல் பரப்புரைக்கான முதல் மாநாட்டை ஹஸ்னாபத்தில் தொடங்க இருக்கிறார். ‘பிரஜல ஆசிர்வாத சபா’ என்ற பெயரில் அடுத்த 50 நாட்களில் 100 பொதுக் கூட்டங்களை நடத்த இருக்கிறார் அவர்.

முன் கூட்டியே தேர்தல் நடத்தினால் மக்களின் வாக்குகள் சிதறாமல் இருக்கும் என்று எண்ணுகிறார் கே.சி.ஆர். முன் கூட்டியே நடத்தவில்லை என்றால், பாராளுமன்ற தேர்தலுக்கு நடுவில் மாநில தேர்தலை நடத்த வேண்டும். அப்படி நடந்தால், மக்களின் கவனம் தேசிய பிரச்சனைகளுக்கு செல்லும், என்றும் எண்ணுகிறார்.

தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியுடன் கூட்டணி ஏதும் அமைக்கவில்லை என்று பா.ஜ.க தரப்பு தகவல்கள் கூறுகின்றன. 117 தொகுதிகளில் பா.ஜ.க தனித்து போட்டியிடும் என்று கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின், மத்திய பெரும்பான்மை பெற்ற கட்சிக்கு தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆதரவு அளிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.

முன்னதாக, சந்திரசேகர ராவ், பிரதமர் மோடியுடன் ரகசிய புரிந்துணர்வில் இருப்பதாக, காங்கிரஸ் தகவல் பரப்பியது. ஆனால், அதை கே.சி.ஆர் தொடர்ந்து மறுத்து வருகிறார். காங்கிரஸும், பா.ஜ.கவும் இல்லாத அணியை உருவாக்க வேண்டும் என அவர் குரல் கொடுத்து வருகிறார்.
 

.