This Article is From Nov 22, 2018

ஜம்மு காஷ்மீர் அரசியலில் பரபரப்பு – சட்டசபையை கலைத்தார் கவர்னர்

காஷ்மீர் அரசியலில் திடீர் திருப்பமாக எதிர் துருவங்களாக இருக்கும் பிடிபி மற்றும் தேசிய மாநாட்டு கட்சிகள் கூட்டணி அமைக்கும் நிலை உருவாகியுள்ளது

ஜம்மு காஷ்மீர் அரசியலில் பரபரப்பு – சட்டசபையை கலைத்தார் கவர்னர்

விரைவில் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவதாக மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

New Delhi:

ஜம்மு காஷ்மீர் அரசியலில் திடீர் திருப்பமாக சட்டசபையை கவர்னர் சத்யபால் மாலிக் கலைத்து நடவடிக்கை எடுத்துள்ளார். இங்கு தேசிய மாநாட்டு கட்சியும், பிடிபி கட்சியும் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை உருவாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014-ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் முப்தி முகமது சயீதுவின் பிடிபி (மக்கள் ஜனநாயக கட்சி) மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை மாநிலத்தில் அமைத்தன.

காஷ்மீர் வரலாற்றில் முதன்முறையாக பாஜக அப்போதுதான் ஆட்சியில் அமர்ந்தது. அன்றைக்கு முதல்வராக முப்தி முகமதுவும், துணை முதல்வராக பாஜகவின் நிர்மல் குமாரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதன்பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக முதல்வர் முப்தி முகமது உயிரிழந்தார்.

இதன் தொடர்ச்சியாக எம்.பி.யாக இருந்த மெகபூபா முப்தி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த நிலையில் இருந்து பாஜக மற்றும் பிடிபி கட்சிகளுக்கு இடையே விரிசல் அதிகரித்து வந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு ஜூன் மாதத்தின்போது பாஜக தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால் ஆட்சி கவிழ்ந்தது.

பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத சூழலில், பாஜக, பிடிபி மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிகள் ஆகிய மூன்றும் 3 துருவங்களாக நின்றன. இதனால் ஆட்சியமைக்க யாரும் முன்வரவில்லை. இதையடுத்து கவர்னர் ஆட்சி காஷ்மீரில் ஏற்படுத்தப்பட்டது. இருந்தாலும், சட்டசபையை கலைக்காமல் கவர்னர் நீட்டித்து வந்தார்.

இத்தகைய சூழலில், மெகபூபா முப்தி கவர்னர் சத்ய பால் மாலிக்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஆட்சியமைக்க அவர் உரிமை கோரியிருக்கிறார். முப்தியின் பிடிபி கட்சிக்கு தேசிய மாநாட்டு கட்சி ஆதரவு அளிக்கும் என தகவல்கள் வந்த நிலையில் காஷ்மீர் அரசியலில் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பிடிபி – தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை கூட்டணி ஆட்சியை அமைத்தால் அதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கவர்னர் சத்யபால் மாலிக் காஷ்மீர் சட்டசபையை கலைத்து நடவடிக்கை எடுத்துள்ளார். அவரை விரைவில் நேரில் சந்திக்கப் போவதாக முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்திருக்கிறார். இதனால் காஷ்மீர் அரசியலில் பரபரப்பு மீண்டும் ஏற்பட்டிருக்கிறது.

மொத்தம் 87 பேர் இருக்கும் ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில், பிடிபி கட்சிக்கு 28 பேர் உள்ளனர். காங்கிரஸுக்கு 12 பேரும், தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 பேரும் சட்டமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இதனால் மூன்று பேரும் சேர்ந்தால் பெரும்பான்மை பலம் எளிதாக கிடைத்து விடும்.

.