This Article is From Mar 22, 2019

கர்நாடகாவில் ஓலா கார்களுக்கு 6 மாதங்களுக்கு தடை! போக்குவரத்து துறை அதிரடி!!

கர்நாடக போக்குவரத்து துறையின் நடவடிக்கை குறித்து பதில் அளித்துள்ள ஓலா நிறுவனம் இந்த நடவடிக்கை துரதிருஷ்டவசமானது என்று கூறியுள்ளது. இந்த சிக்கலில் இருந்து மீள்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஓலா தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் ஓலா கார்களுக்கு 6 மாதங்களுக்கு தடை! போக்குவரத்து துறை அதிரடி!!

ஓலா கார் மீதான நடவடிக்கை குறித்து இன்றுதான் அறிவிக்கை வெளியானது.

Bengaluru:

கர்நாடகாவில் ஓலா கார்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு தடை விதித்து மாநில போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஓராண்டாக இந்த தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும், விதிகளை மீறி ஓலா நிறுவனர் கார்களை இயக்கி வந்ததாகவும், போக்குவரத்து துறை கூறியுள்ளது. 

இதுகுறித்து கர்நாடக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

மாநிலம் முழுவதும் ஓலா கார்களின் சேவையை 6 மாதங்களுக்கு தடை விதித்து போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்கிறது. அனுமதியின்றி ஓலா கார்கள் கர்நாடகாவில் இயக்கப்பட்டு வந்தன. இதுதொடர்பாக நாங்கள் பலமுறை நோட்டீஸ் அனுப்பினோம். இதற்கு பதில் ஏதும் வராததால் இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம். 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இன்றுதான் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இது சம்பந்தமாக ஓலா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இருந்துதான் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. 

ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மீண்டும் கார்களை இயக்குவதற்கான வாய்ப்புகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். மக்களுக்கு சேவை அளிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான டிரைவர்களுடன் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது.

ஓலா எப்போதும் சட்டத்தை மதித்து அதன்படி நடக்கும் நிறுவனம். அரசுடன் இணைந்து வளர்ச்சிக்காவும் மக்களின் முன்னேற்றத்திற்காக பணியாற்றும் நிறுவனம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.