This Article is From Jan 24, 2019

‘முதல்வரைப் பாராட்டுகிறேன்..!’- முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து கனிமொழி

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2015-ம் ஆண்டில் முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது

‘முதல்வரைப் பாராட்டுகிறேன்..!’- முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து கனிமொழி

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று தொடங்கி வைத்தார்

ஹைலைட்ஸ்

  • முதல் முதலீட்டாளர்கள் மாநாடு 2015-ல் நடந்தது
  • 2வது மாநாட்டை நேற்று முதல்வர் தொடங்கி வைத்தார்
  • இன்று மாநாடு நிறைவு பெற்றது

சென்னையில் இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று முடிவடைந்தது. இந்நிலையில், இந்த மாநாட்டின் மூலம் 3 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்ய புரிந்தணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழி, ‘முதலீடு குறித்து முதல்வர் கூறியிருப்பது மிக நகைச்சுவையாக இருக்கிறது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.  

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2015-ம் ஆண்டில் முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் நிறைவு நாள் அன்று ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 2-வது முறையாக அம்மாநாடு நடைபெற்றுள்ளது. மாநாட்டில் பங்கேற்க 2,900 முதலீட்டாளர்கள் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று தொடங்கி வைத்தார். பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிறைவு நாள் விழாவான இன்று, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்றார். 

இந்நிலையில் மாநாடு நிறைவின் போது உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்க, இலக்கு நிர்ணயித்திருந்தோம். ஆனால், அதைத் தாண்டிவிட்டோம். சுமார், 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 3.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடு, இந்த இரண்டு நாட்களில் மட்டும் கையெழுத்தானது' என்று கூறினார். 

இதற்கு பதில் கருத்து கூறியுள்ள கனிமொழி, ‘முதலீடு குறித்து முதல்வர் சொல்வதெல்லாம் சிறந்த நகைச்சுவையாக இருக்கிறது. முதல்வருக்கும் இவ்வளவு நகைச்சுவை இருக்கிறது என்பதைப் பாராட்டுகிறேன்' என்றுள்ளார். 

.