This Article is From Jan 06, 2020

ஜேஎன்யூ வன்முறை தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

JNU violence: மும்பை, அலிகார், புனே, கொல்கத்தா மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் மாணவர்கள் தங்கள் போராட்டங்களை தொடர்ந்துள்ளனர்.

மும்பை முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் கேட்வே ஆஃப் இந்தியாவில் கூடினர்.

New Delhi:

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த வன்முறை தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் தன்னெழுச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

நேற்றிரவே மும்பை கேட்வே ஆஃப் இந்தியா அருகே பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கூடி தாக்குதல் நடத்தியவர்கள் மீது மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த தாக்குதலுக்கு காரணமாக கூறப்படும் ஏபிவிபி அமைப்பிற்கு எதிராகவே மாணவர்கள் கடும் கண்டன குரல் எழுப்பினர். 

அலிகார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் மெழுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர்களும் நள்ளிரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்களும் நள்ளிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுதொடர்பாக ஜாமியா ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், முகமூடி அணிந்தவர்களுக்கு ஒத்துழைப்பு தந்த நிர்வாகம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அச்சுறுத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், ஆயுதமேந்திய குண்டர்களால் ஜே.என்.யூ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை ஜாமியா ஆசிரியர்கள் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது. பல்கலைக்கழகத்தை பாதுகாக்க ஒரு துணிச்சலான போராட்டத்தை தைரியமாக நடத்திய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையிலான நிர்வாகத்தின் ஒரு வெட்கக்கேடான முயற்சி என்று தெரிவித்துள்ளது. 

முகமூடி அணிந்தவர்கள் பல்கலை., வளாகத்தில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்த போதிலும், வளாகத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு காவலர்கள் "ஊமையாக பார்வையாளர்களாக" இருந்ததாக ஜே.என்.யுவின் மாணவர்களும் ஆசிரிய உறுப்பினர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனிடையே, முகமூடி அணிந்தவர்களுக்கு எதிராக காவல்துறையின் செயலற்ற தன்மையை கண்டித்து நூற்றுக்கணக்கானவர்கள் டெல்லி தலைமை காவல்நிலையத்திற்கு வெளியே கூடியிருந்தனர். ஜே.என்.யூவில் தாக்குதல் நடந்ததை அறிந்ததும் நாங்கள் இங்கு வந்துவிட்டோம். நாட்டின் குடிமக்களை பாதுகாப்பது அரசின் கடமையாகும் அதில் மாணவர்களும் அடங்குவர். இந்த மாணவர்களின் பெற்றோர் அனுபவிக்கும் அதிர்ச்சியை நீங்கள் சிறுது கற்பனை செய்து பாருங்கள் என்று எதிர்பாளர்களில் ஒருவர் கூறினார். 

ஜேஎன்யூவில் நடந்த இந்த கொடூரத் தாக்குதலில் மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷ் மற்றும் 5 ஆசிரியர்கள் உட்பட 24 பேர் படுகாயமடைந்துள்ளனர். 
 

.