மாணவ அமைப்பு, “சாய் பாலாஜி மீது மட்டுமல்ல, பல்வேறு மாணவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் அரசியல் உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றுள்ளது
New Delhi: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவ சங்கத் தலைவர் சாய் பாலாஜி, பிரதமர் மோடிக்கு எதிராக பேசியதால், அவரது எம்.பில் பட்டத்துக்கான மதிப்பீடு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாணவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாணவ சங்கத் தலைவர் சாய் பாலாஜி மீது தற்போது இரண்டு விஷயம் குறித்து விசாரணை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று அகாடமிக் கவுன்சில் வளாகத்துக்கு எதிராகவும் மோடிக்கு எதிராகவும், ஆர்.எஸ்.எஸ்- பாஜகவுக்கு எதிராகவும் கோஷமிட்டதற்காக விசாரணை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘சமமான வேலை, சமமான ஊதியம்' என்பதை வலியுறுத்தும் வகையில், பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பேரணியில் அவர் கலந்து கொண்டதற்காகவும் விசாரணை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மாணவ அமைப்பு, “சாய் பாலாஜி மீது மட்டுமல்ல, பல்வேறு மாணவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் அரசியல் உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாஜக அரசுக்கு எதிராக மாணவர்கள் பேசுவதைத் தடுக்க, மாணவ அமைப்பின் தலைவர் சாய் பாலாஜி மீதே நடவடிக்கை எடுத்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். மேலும், அவரது எம்.பில் பட்ட மதிப்பீட்டையும் நிறுத்தி வைத்துள்ளது. பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜகதீஷ் குமார், பேராசிரியர்களுக்கு தினமும் ஒவ்வொரு வகையில் துன்புறுத்தல் கொடுத்து வருகிறார்” என்றுள்ளது.
விஸ்வரூபம் எடுக்கும் இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழக வட்டாரத்திடம் விசாரித்தபோது, “சாய் பாலாஜி, கல்வி கற்பதிலும், வகுப்பிற்குப் போவதிலும் எந்த வித சிக்கலும் இருக்காது. அதே நேரத்தில் அவரது தேர்வு மதிப்பெண் பட்டியலை பெற முடியாது” என்று கூறியுள்ளது.
பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு ஜே.என்.யூ ஆசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “சாய் பாலாஜியின் எம்.பில் பட்டத்தைத் தடுக்கும் வகையில் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை இது” என்று ஆசிரியர்கள் சங்கம் கொதித்துள்ளது.