This Article is From Feb 29, 2020

“முன்னதாகவே குறி வைக்கப்பட்டிருக்கிறேன்” தேசத் துரோக வழக்கு குறித்து கன்னையா குமார்

ஜனவரி 2019-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்திய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அஃப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து நடந்த நிகழ்வில் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன என்று அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது

Delhi government has cleared prosecution of Kanhaiya Kumar over the 2016 JNU sedition case (File)

New Delhi:

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னையா குமார், உமர் காலித், உள்ளிட்ட ஒன்பது பேர் மீதான தேசத் துரோக வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து அடுத்த கட்ட நடவடிக்கைக்குச் செல்ல டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவுக்கு டெல்லியின் ஆம் ஆத்மி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து என்.டி.டி.வியிடம் பேசிய கன்னையா குமார், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் பீகார் மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி முன்னதாகவே தான் குறிவைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

kanhaiya kumar

அவர் மேலும், சில வழக்குகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். கடந்த மாதம் மூன்று ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளுடன் டெல்லிக்குச் சென்றிருந்தபோது பிடிபட்ட மூத்த ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அதிகாரி டேவிந்தர் சிங் மீது தேசத் துரோக வழக்கு பதியப்படாததையும் கன்னையா குமார் குறிப்பிட்டிருக்கிறார். தேசத் துரோக வழக்குகள் குறுகிய அரசியல் நோக்கத்திற்காகவும் ஆதாயத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் விமர்சித்திருந்தார்.

மேலும், தான் தேச விரோத முழக்கங்கள் எதையும் எழுப்பவில்லை என்றும், பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாரிக்கொண்டிருக்கின்ற சூழலில் இம்மாதிரியாக வழக்குகள் பதியப்படுவதையும் சுட்டிக்காட்டியிருந்தார். அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் இந்த மாதிரியான குற்றச்சாட்டுகளை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின் விண்ணப்பத்தினை, ஒரு வருடத்திற்குப் பின்னர் ஆம் ஆத்மி கட்சி ஏன் வழக்குத் தொடர அனுமதித்தது என்று எழுப்பப்பட்ட கேள்வியைத் திரு குமார் மறுத்துவிட்டார்;

ஆம் ஆத்மியின் இந்த நிலைப்பாடு குறித்துத் தான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்றும், விரைவான நீதிமன்ற விசாரணையின் மூலம் விரைவான நீதி கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், நீதித்துறை மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் உரிய செயல்முறையை பின்பற்றுவதன் மூலம் நீதியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

டெல்லி நீதிமன்றமானது, நடைமுறை அடிப்படையில் குற்றப்பத்திரிகையை நிராகரித்ததையடுத்து, அதன் பிறகு ஜனவரி 19, 2019 அன்று விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ மற்றும் செய்தித் தொடர்பாளர் ராகவ் சதாவும் என்.டி.டி.வி-யுடன் பேசினர், இந்த விவகாரத்தில் தனது கட்சியின் முடிவை ஆதரித்தனர். இது வழக்கமான நடைமுறைதான் என்றும் குறிப்பிட்டிருந்தார், மேலும் தில்லி அரசாங்கம் இதுபோன்ற கொள்கை விடயத்திலும் எந்தவொரு மாற்றுக்கருத்தையும் கொண்டிருக்காது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் "இது வெறும் வழக்கமான நடைமுறை சார்ந்தது என்று நான் நினைக்கவில்லை ... ஒரு தேசத்துரோக வழக்கு என்பது அரசாங்கத்தின் அனுமதியைக் குறிக்கிறது. தில்லி அரசாங்கத்தின் நிலையான ஆலோசகர் (ராகுல் மெஹ்ரா) அனுமதி வழங்கக்கூடாது என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தார். என்பது குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாகும்" என்று உமர் காலித் குறிப்பிட்டிருக்கிறார்.

கன்னையா குமாரைப் போலவே, உமர் காலித்தும் நீதிமன்றத்திற்கு செல்வதில் தனக்குச் சிரமமேதும் இல்லை என்றும், நீதி கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும், "நாங்கள் பல ஆண்டுகளாக இந்த குற்றச்சாட்டுகளின் நிழலில் வாழ்ந்தோம்" என்றும் கூறியிருந்தார்.

பிப்ரவரி 2016-ல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினரால் நடத்தப்பட்ட பேரணியில் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டதாகக் கன்னையா குமார் உள்ளிட்டவர்கள் மீது டெல்லியில் உள்ள வசந்த் குஞ்ச் காவல் நிலையத்தில் தேச துரோகம் மற்றும் சதித் திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஜனவரி 2019-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்திய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அஃப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து நடந்த நிகழ்வில் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன என்று அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது என்பதே இந்த வழக்கின் தொடக்கமாகும்.

.