This Article is From Jan 28, 2019

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த ஈரோடு மக்கள்..!

இந்த நிலையில் இன்றைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த ஈரோடு மக்கள்..!

ஈரோடு- மேட்டுப்பாளையும் செல்லும் சாலையில் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அங்கு பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்

  • ஈரோடு, பெருமாள்மலையில் போராட்டம் நடந்து வருகிறது
  • சாலை மறியலால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
  • மக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள், மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 22-ம் தேதி முதல் இந்தப் போராட்டம் நடந்து வருகிறது. இன்று பள்ளிக்குத் திரும்புமாறு ஆசிரியர்களுக்கு கெடு விதித்திருந்தது தமிழக அரசு. ஆனால், ‘கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை ஸ்டிரைக் வாபஸுக்கு வாய்ப்பே இல்லை' என்று ஜாக்டோ- ஜியோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

இப்படிப்பட்ட சூழலில் ஈரோடு மாவட்டம், பெருமாள்மலையில் பொது மக்கள் ஆசிரியர்களுக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால், தங்களின் குழந்தைகளின் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொது மக்களில் ஒருவர், “தனியார் பள்ளியில் வெறும் 10,000 ரூபாய் சம்பளம் வாங்கிவிட்டு, மாணவர்களுக்குத் தரமான கல்வியை அளிக்கிறார்கள். ஆனால், அரசு பள்ளி ஆசிரியர்கள் லட்சக்கணக்கில் ஊதியம் வாங்கிவிட்டு போராட்டம் நடத்துகிறார்கள். தற்காலிக ஆசிரியர்களையும் பணிக்கு வரக் கூடாது என்று அவர்கள் மிரட்டுகிறார்கள். உடனடியாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரையும் இந்த அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அவர்களுக்குப் பதிவலாக, நிரந்தர ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும். பல திறமையுள்ள பட்டதாரிகள் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆவதற்குக் காத்திருக்கின்றனர்” என்று கொதிப்புடன் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்தார். 

ஈரோடு- மேட்டுப்பாளையும் செல்லும் சாலையில் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அங்கு பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சில காவல் துறை அதிகாரிகள் மக்களிடத்தில் போராட்டத்தைக் கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

முன்னதாக ஸ்டிரைக் விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக் கொண்டது. இதனை பொருட்படுத்தாத ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் இன்றைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைக்குள் பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், அதனை மீறினால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளதென அறிவிக்கப்படும் என்றும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. 

துறை ரீதியாக அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் மீண்டும் அதே பணியிடத்தில் நியமிப்பதில் சிக்கல் இருக்கும் என்பதால், தமிழக அரசின் இந்த அறிவிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக கருதப்படுகிறது. 


.