This Article is From Mar 12, 2020

நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் ஐ.டி அதிகாரிகள் ஆய்வு!

பிகில் பட விவகாரத்தில் ஏற்கனவே சோதனை நடத்திய அதிகாரிகள், தற்போது ஆவணங்கள் குறித்து மீண்டும் ஆய்வு செய்து வருகின்றனர். 

நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் ஐ.டி அதிகாரிகள் ஆய்வு!

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு

ஹைலைட்ஸ்

  • நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் ஐடி அதிகாரிகள் ஆய்வு
  • பிகில் பட விவகாரத்தில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன
  • மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் வீட்டிலும் சோதனை நடந்தது.

சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்து வருகின்றனர். 

பிகில் பட விவகாரம் தொடர்பாக அண்மையில் நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, அன்புச்செழியன் வீட்டில் இருந்து 77 கோடி ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், வருமானவரித்துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம், நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. 

இதனையடுத்து சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியனின் ஆடிட்டர்கள் மற்றும் கல்பாத்தி எஸ்.அகோரத்தின் மகள் அர்ச்சனா ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளர் வீடு மற்றும் அலுவலங்களில் சோதனை நடத்தப்பட்டது. அந்த விசாரணையின் தொடர்ச்சியாக, தற்போது நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்து வருகின்றனர். 

பிகில் பட விவகாரத்தில் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

.