This Article is From Sep 30, 2018

ஐ.நா. அறிவித்த தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பது பாகிஸ்தான்: இந்தியா பதிலடி

ஐ.நா. சபையில் பாகிஸ்தான் கூறிய புகார்களுக்கு இந்தியா பதில் கூறியுள்ளது. தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பதாக பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

ஐ.நா. அறிவித்த தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பது பாகிஸ்தான்: இந்தியா பதிலடி

ஹபீஸ் சயீது சுதந்திரமாக நடமாடுவதை பாகிஸ்தான் மறுக்க முடியுமா என்று இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.

New York:

ஐ.நா. பொதுச்சபையில் 73-வது கூட்டம் தலைமையிடமான நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மெஹ்மூத் குரேஷி, கடந்த 2014-ல் நடந்த பெஷாவர் பள்ளி தாக்குதலில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டினார். இதேபோன்று இரு நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை நின்றதற்கு இந்தியாதான் காரணம் என்று கூறினார்.

இதற்கு ஐ.நா. சபைக்கான இந்திய செயலர் எனாம் காம்பீர் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து ஐ.நா. சபையில் எனாம் காம்பீர் பேசியதாவது- பெஷாவரில் பள்ளிக் குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்தின்போது பாகிஸ்தானின் துயரத்தில் இந்தியாவும் பங்கெடுத்தது. இதனை நான் பாகிஸ்தானின் புதிய அரசுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். பெஷாவர் சம்பவத்திற்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பாகிஸ்தான் குழந்தைகளுக்காக 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தீவிரவாதத்திற்கு எதிராக போரிடுகிறோம் என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. ஆனால் ஐ.நா. அறிவித்துள்ள 132 தீவிரவாதிகளுக்கு அந்நாடுதான் புகலிடம் அளித்து வருகிறது. 22 தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு நிதியுதவி செய்வதும் பாகிஸ்தான் தான். இதனை அந்நாடு மறுக்க முடியுமா?. மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஹபீஸ் சயீது பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார். தீவிரவாதத்தை கைவிட்டால் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும்.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை பாகிஸ்தானில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

.