This Article is From Mar 25, 2020

பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் சமூக விலகல் குறித்த விளக்கம்!

India coronavirus lockdown: நேற்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்படுவதாகவும், அடுத்த 3 வாரங்களுக்கு மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவது பற்றி சிந்திக்காமல் வீட்டிலே இருக்கும் படி கேட்டுக்கொண்டார்.

பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் சமூக விலகல் குறித்த விளக்கம்!

India coronavirus lockdown: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்.

ஹைலைட்ஸ்

  • பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்.
  • அமைச்சரவை கூட்டத்தில் சமூக விலகல் குறித்த விளக்கம்!
  • வைரசை தடுக்க வேண்டுமென்றால் சமூக விலகல் மட்டுமே வழி
New Delhi:

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் நாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமூக விலகல் குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. 

இதுதொடர்பாக சமூகவலைத்தளங்களில், புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில், டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது. அதில், போதுமான இடைவெளியுடன், பாதுகாப்பான தூரத்தில் அமைச்சர்கள் அமர்ந்துள்ளனர். 

நேற்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்படுவதாகவும், அடுத்த 3 வாரங்களுக்கு மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவது பற்றி சிந்திக்காமல் வீட்டிலே இருக்கும் படி கேட்டுக்கொண்டார். மேலும், உலகளவில் 14,000 உயிர்களைப் பறித்த இந்த கொரோனா வைரஸின் பரவல் சங்கிலியை உடைக்க இந்த கால இடைவெளி நமக்கு மிகவும் அவசியமானது என்று அவர் விளக்கினார்.

கொரோனா என்ற கொடூர வைரசை தடுக்க வேண்டுமென்றால் சமூகத்திலிருந்து விலகி இருப்பது மட்டுமே ஒரே சிறந்த வழியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். 

தற்போது சமூக விலகல் என்பதே மிகவும் முக்கியமானது. நாங்கள் அதனை உறுதிப்படுத்தியுள்ளோம்.. நீங்கள்?.. என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்வீட்டரில் தெரிவித்துள்ளார். 

பலர் சமூக விலகல் என்பது நோயாளிகளுக்கு மட்டும் என்று நினைக்கின்றனர். அது தவறானது. சமூக விலகல் என்பது அனைவருக்குமான, பிரதமருக்கும் அதைத் தான் கடைப்பிடிக்க வேண்டும் என்று மோடி தனது உரையில் தெரிவித்திருந்தார். 

இந்த அமைச்சரவை கூட்டமானது வீடியோ காலில் நடைபெற இருந்ததாகவும், எனினும், இருக்கை ஏற்பாடுகள் மற்றும் மாற்றம் செய்யப்பட்டு, வழக்கமான வழியிலே கூட்டம் நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவில் இதுவரை 530 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 

மக்களை சமூக விலகலைப் பின்பற்ற வைப்பது மற்றும் தனிமைப்படுத்துவதைத் தவிர்த்து, பால், காய்கறிகள், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதை உறுதி செய்வதும் அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும் என தெரிகிறது. 

.