This Article is From May 28, 2020

2 மாதங்களுக்கு பின்னர் கொல்கத்தாவில் மீண்டும் துவங்கியது உள்நாட்டு விமான போக்குவரத்து!

கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து 10 விமானங்கள் புறப்பட உள்ளன. அதே அளவில் வெளியில் இருந்து விமானங்கள் வருகை தர உள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 மாதங்களுக்கு பின்னர் கொல்கத்தாவில் மீண்டும் துவங்கியது உள்நாட்டு விமான போக்குவரத்து!

இன்று காலை 6.05 மணி அளவில் கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து 40 பயணிகளுடன் கவுகாத்திக்கு முதல் விமானம் புறப்பட்டது

New Delhi:

ஊரடங்கு காரணமாக 2 மாத இடைவெளிக்கு பின்னர் கொல்கத்தாவில் மீண்டும் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவைகள் துவங்கியது. நாடு முழுவதும் மே.25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகள் துவங்கிய நிலையில், கொல்கத்தாவில் மட்டும் ஆம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக விமான சேவைகள் தொடங்கப்படாமல் இருந்தது. 

இதைத்தொடர்ந்து, இன்று காலை 6.05 மணி அளவில் கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து 40 பயணிகளுடன் கவுகாத்திக்கு முதல் விமானம் புறப்பட்டது. அதேநேரத்தில் 122 பயணிகளுடன் டெல்லியில் இருந்து முதல் விமானம் கொல்கத்தா வந்தடைந்ததாக கொல்கத்தா விமான நிலையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக கொல்கத்தா விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், கொல்கத்தா விமான நிலையத்திற்கு பயணிகளை மீண்டும் வரவேற்கிறோம்! 2 மாதங்களுக்கு பின்னர், கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து 40 பயணிகளுடன் முதல் விமானம் கவுகாத்தி புறப்பட்டது. அதேபோல், 122 பயணிகளுடன் டெல்லியில் இருந்து முதல் விமானம் கொல்கத்தாவுக்கு வந்தடைந்தது. முறையான சோதனைகள் பின்பற்றப்பட்டு, முனையத்தில் வழக்கமான சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து 10 விமானங்கள் புறப்பட உள்ளன. அதே அளவில் வெளியில் இருந்து விமானங்கள் வருகை தர உள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்குவங்கத்தின் பாக்தோக்ரா விமான நிலையத்திலும் உள்நாட்டு விமான சேவைகள் துவங்கின. 

மேற்குவங்கத்திற்கு வருகை தருபவர்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை அண்மையில் அம்மாநில அரசு வெளியிட்டிருந்தது. அதில், பயணிகள் விமான நிலையத்தில் சுகாதார சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கடந்த 2 மாதங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 

இதுதொடர்பாக விமான நிலையத்தின் மூத்த அதிகாரி கூறும்போது, சமூக இடைவெளியை கடைபிடித்து, பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரவல் ஏற்படாத வகையில் பாதுகாப்பாக அழைத்து செல்வதற்கான வழிமுறைகளையும் விமான நிலையம் மேற்கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

With inputs from PTI

.