This Article is From Sep 24, 2018

ஐ.நா பொதுச் சபையில் இந்தியா: முழு விவரம்

உலகின் 49 நாடுகளில் இருக்கும் ஐ.நா-வின் ‘அமைதிப் படைக்கு’ இந்தியா அதிக அளவில் ஆதரவு அளித்து வருகிறது

ஐ.நா பொதுச் சபையில் இந்தியா: முழு விவரம்

இந்தியா சார்பில் இந்தக் கூட்டத்தில் பங்கெடுக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நியூயார்க் சென்றுள்ளார்

New York:

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்தியா சார்பில் இந்தக் கூட்டத்தில் பங்கெடுக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நியூயார்க் சென்றுள்ளார். 95 நாடுகளின் தலைவர்கள், 4 துணை அதிபர்கள், 42 நாடுகளின் தலைமை அமைச்சர்கள், 3 துணை பிரதமர்கள் மற்றும் 48 அமைச்சர்கள் இந்த பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

இது குறித்து முக்கிய தகவல்கள்:

1.பாகிஸ்தான் ராணுவம் சமீபத்தில் இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் 3 பேரை கடத்திக் கொன்றது. இது குறித்து சுஷ்மா சுவராஜ் ஐ.நா சபையில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல காஷ்மீரில் இந்தியா செய்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்தான ஐ.நா-வின் அறிக்கைக்கும் பதில் அளிக்கப்படும் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு ஐ.நா சபைக் கூட்டத்தில் சுஷ்மா, ‘நாங்கள் ஐஐடி, ஐஐஎம் கல்வி நிறுவனங்களை உருவாக்கினோம். பாகிஸ்தான் லஷ்கர் இ தய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற தீவிரவாத அமைப்புகளை உருவாக்கியது’ என்று சாடினார். 

2.பாகிஸ்தான் பிரதமராக இருந்த ஷாகித் கான் அப்பாஸி சென்ற ஆண்டு இந்திய தரப்பு பேசுவதற்கு முன்னர் பேசினார். எனவே இந்த ஆண்டு இந்தியா சார்பில் முதலில் பேசப்படும். அதைத் தொடர்ந்து பாகிஸ்தான், அதற்கு பதில் அளிக்கும் வகையில் கருத்துகள் கூறும் எனப்படுகிறது.

3.ஐ.நா-வுக்கான இந்திய தூதர் சையத் அக்பருதீன், இந்த பொதுச் சபைக் கூட்டத்தில், 30 நாடுகளுடன் இந்தியா பேச ஆவலாக உள்ளது என்று கூறி அனுமதி கோரியுள்ளார். இதில் எத்தனை நாடுகளுடன் சுஷ்மா பேச முடியும் என்பது குறித்து தெளிவு இல்லை.

4.ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமை வகிக்க உள்ளார். அப்போது அவர் ஈரானுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளுடனும் நட்பு பாராட்டி வரும் இந்தியாவுக்கு அந்தக் கூட்டம் கடுமையானதாக இருக்கும். ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, ‘ஈரான் உடனான உறவு குறித்து இந்தியா யோசிக்க வேண்டும்’ என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

5.இந்தியா, புவி வெப்பமாதல் குறித்து தனது கவனத்தை செலுத்த உள்ளது. பாரீஸ் ஒப்பந்தத்தை அமல்படுத்துவது குறித்து இந்தியா பேசும். வரும் புதன் கிழமை புவி வெப்பமாதல் குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் அண்டானியோ கட்டர்ஸ் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார் சுஷ்மா சுவராஜ்.

6.காசநோய் குறித்து இந்த முறை நடக்கும் ஐ.நா சபை பொதுக் கூட்டத்தில், தனி அமர்வு நடத்தப்பட உள்ளது. வரும் 2030-க்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க ஐ.நா இலக்கு வைத்துள்ளது. ஆனால், அதற்கு 5 ஆண்டுக்கு முன்னரே காசநோயை ஒழிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. இது குறித்தான கூட்டங்களில் கலந்து கொள்ள இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவும் நியூயார்க் சென்றுள்ளார்.

7.ரோஹிங்கியா முஸ்லீம் விவகாரம் தொடர்பாகவும் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். இந்த விவகாரம் குறித்து ஐ.நா சபையும் இன்னும் உறுதியான முடிவை எடுக்கவில்லை. ரோஹிங்கியா விவகாரம் குறித்து தீர்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு சீனா மற்றும் ரஷ்யா முடக்குப் போட்டுள்ளது. மியான்மார் மற்றும் வங்கதேசம் அவர்களாகவே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று மேற்குறிப்பிட்டுள்ள 2 நாடுகளும் தெரிவித்துள்ளன. இந்தியாவில் இருக்கும் 40,000 ரோஹிங்கியா முஸ்லீம்களும் வெளியேற்றப்படுவர் என்று மோடி அரசு கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பும். 

8.ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கோரியது தொடர்பாக எந்த ஸ்திரமான முடிவும் எடுக்கப்படவில்லை. அது குறித்தும் இந்தியா கறாராக பேச வாய்ப்புள்ளது. ‘இந்தியாவுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் தரும் நடவடிக்கைக்கு 160-க்கும் அதிகமான நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன’ என்று கூறியுள்ளார் சுஷ்மா சுவராஜ்.

9.உலகின் 49 நாடுகளில் இருக்கும் ஐ.நா-வின் ‘அமைதிப் படைக்கு’ இந்தியா அதிக அளவில் ஆதரவு அளித்து வருகிறது. ‘அமைதியை நிலைநாட்ட இந்திய தரப்பில் பலர் இறந்த பிறகும், அதற்கான முறையான அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை’ என்று ஐ.நா-வுக்கான இந்திய தூதர் அக்பருதீன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

10.சீனாவின் வேகமான வளர்ச்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் பல திட்டங்களுக்கு, பங்களிப்பைக் கொடுக்கும் எனப்படுகிறது.  

.