This Article is From Feb 27, 2019

'விமானி பத்திரமாக திருப்பி அனுப்பப்பட வேண்டும்!'- பாகிஸ்தானிடம் வலியுறுத்தும் இந்தியா

இந்தியா - பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது

'விமானி பத்திரமாக திருப்பி அனுப்பப்பட வேண்டும்!'- பாகிஸ்தானிடம் வலியுறுத்தும் இந்தியா

பாகிஸ்தான் தரப்பு, விமானி, அவர்கள் பிடியில் இருப்பதாக தெரிவித்துள்ளது, இந்தியா அரசு தகவல்

இந்தியா - பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் பிடியில் இந்திய விமானி சிக்கியிருப்பதை உறுதி செய்துள்ளது இந்திய அரசு. மேலும், விமானி பத்திரமாக நாட்டுக்குத் திரும்ப அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இன்று மதியம் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், ‘ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாமை இந்திய விமானப்படை தாக்கி, அழித்த பிறகு, பாகிஸ்தான் தரப்பு எல்லைக் கட்டுப்பாட்டை மீறி தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இன்று பாகிஸ்தான் தரப்பு வான் வழி தாக்குதலில் ஈடுபட்டது.

இந்திய விமானப்படை அதற்கு பதிலடி கொடுத்தது. இந்த சண்டையில் ஒரு பாகிஸ்தானிய விமானப்படை விமானம் சுட்டுக் வீழ்த்தப்பட்டது. 

இந்த சம்பவத்தில் இந்திய விமானப்படையின் மிக் 21 போர் ரக விமானம் காணவில்லை. பாகிஸ்தான் தரப்பு, விமானி, அவர்கள் பிடியில் இருப்பதாக தெரிவித்துள்ளது. அது குறித்து நாங்கள் விசாரணை செய்து வருகிறோம்' என்றார்.

இந்நிலையில் அரசு தரப்பு தற்போது வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 'பாகிஸ்தான் வசம் பிடிபட்டுள்ள இந்திய விமானியை, அந்நாட்டு அரசு துன்புறுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. சர்வதேச மனித உரிமை விதிகளை பாகிஸ்தான் தரப்பு மதித்து நடந்துகொள்ள வேண்டும்' என்றுள்ளது. 

பாகிஸ்தான் வசம் பிடிபட்ட இந்திய விமானியை, அந்நாட்டு மக்கள் அடிப்பதையும், அவர் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்டிருப்பதையும் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்கள் மூலம் பார்க்க முடிந்தது. பின்னர் அவர் டீ குடித்துக் கொண்டு பேசும் வீடியோவும் வைரலானது. தொடர்ந்து அவரது நிலை குறித்து இந்திய தரப்பு கவனித்து வருகிறது. சீக்கிரமே அவரை விடுவித்து நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. 

 புல்வாமா தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் நேற்று தாக்குதல் நடத்தியது.

நேற்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 12 மிராஜ் 2000 என்ற ஜெட் போர் விமானம் 1,000 கிலோ எடை கொண்டு வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியுள்ளது.

சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை போன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் 100 சதவிகிதம் வெற்றிகரமாக முடிந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க - எல்லையில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஒப்புதல்! - இந்தியாவுக்கு எச்சரிக்கை!

.