This Article is From Oct 29, 2018

‘காந்தி குடும்பத்திற்கு எதிராக பேச மாட்டேன்!’- முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி

நவம்பர் 12 மற்றும் 20 ஆம் தேதிகளில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது

‘காந்தி குடும்பத்திற்கு எதிராக பேச மாட்டேன்!’- முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி

தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை, ஜோகி

New Delhi:

காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்த அஜித் ஜோகி, இந்த முறை தனியாக கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திக்க இருக்கிறார். இந்நிலையில் அவர், ‘நான் காங்கிரஸுக்கு எதிராக போட்டியிட்டாலும், காந்தி குடும்பத்துக்கு எதிராக பேச மாட்டேன்' என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் பேசுகையில், ‘அடுத்த மாதம் சத்தீஸ்கரில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக-வுக்கு எனது கட்சிக் கூட்டணிக்கும் தான் போட்டி இருக்கும்' என்று பேசியுள்ளார். ஜோகி புதிதாக ஆரம்பித்துள்ள ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியுடன், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைத்துள்ளது.

அவர் தொடர்ந்து, ‘காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராகவும் நான் பேச மாட்டேன். இப்போது மட்டுமல்ல தேர்தல் மேடைகளிலும் பேச மாட்டேன். அவர்கள் என் மீது எப்போதும் அன்பு வைத்திருக்கிறார்கள். நான் அவர்கள் மீது மட்டற்ற மரியாதை வைத்திருக்கிறேன்.

சத்தீஸ்கரில் காங்கிரஸுக்கு ஒரு முகமே இல்லை. மாநிலத்தில் நல்ல தலைவர்களையும் காங்கிரஸ் பெற்றிருக்கவில்லை. இந்த முறை பாஜக-வுடன் தான் நேரடி போட்டி. எங்கள் கூட்டணி தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எங்கள் கூட்டணியில் நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் நான் முடிவெடுக்கவில்லை' என்று பேசியுள்ளார்.

மத்திய பிரதேசத்திலிருந்து சத்தீஸ்கர் தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட பின்னர், நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோகி முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால், அவருக்கும் கட்சிக்கும் இடையில் மோதல் வரவே, 2016 ஆம் ஆண்டு தனியாக பிரிந்து சென்று புதிய கட்சியைத் தொடங்கினார்.

நவம்பர் 12 மற்றும் 20 ஆம் தேதிகளில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கான முடிவுகள் டிசம்பர் 11 ஆம் தேதி வெளியிடப்படும். 2003 முதல், பாஜக தான் சத்தீஸ்கரில் ஆட்சி அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

.