This Article is From Jan 24, 2019

‘பாஜக-வில் இணையத் தயார்..!’- கன்டிஷன் போட்ட உதயநிதி

உதயநிதி ஸ்டாலின், பாஜக-வில் இணையத் தயார் என்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்

‘பாஜக-வில் இணையத் தயார்..!’- கன்டிஷன் போட்ட உதயநிதி

திருவாரூர் இடைத் தேர்தல் அறிவிப்பு முதலே உதயநிதியின் பெயர் தமிழக அரசியலில் பரபரக்கப்பட்டு வருகிறது.

ஹைலைட்ஸ்

  • முரசொலியின் இயக்குநராக உதயநிதி செயல்பட்டு வருகிறார்
  • தொடர்ச்சியாக திமுக கூட்டங்களில் உதயநிதி பங்கேற்று வருகிறார்
  • தொடர்ந்து திரைப்படங்களிலும் உதயநிதி நடித்து வருகிறார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், பாஜக-வில் இணையத் தயார் என்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதே நேரத்தில் அவர் ஒரு கன்டிஷனையும் போட்டுள்ளார். 

இன்னும் ஒரு சில மாதங்களில் லோக்சபா தேர்தல், இடைத் தேர்தல் என அடுத்தடுத்து தேர்தல்கள் தமிழகத்தில் வரிசைக் கட்டி நிற்கின்றன. இந்த மாதத் தொடக்கத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத் தேர்தல் நடக்கும் என்று சொல்லப்பட்டது. அப்போது திமுக சார்பில் ஸ்டாலினோ அல்லது உதயநிதியோ களமிறங்க வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டது. வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர், பூண்டி கலைவாணன் வேட்பாளராக அறிவித்தது அக்கட்சி. ஆனால், இடைத் தேர்தல் தற்போதைக்கு நடத்தப்படாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. 

திருவாரூர் இடைத் தேர்தல் அறிவிப்பு முதலே உதயநிதியின் பெயர் தமிழக அரசியலில் பரபரக்கப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம், திருவாரூரில் போட்டியிட அவரின் ஆதரவாளர்கள், விருப்ப மனுவை திமுக தலைமையிடம் தாக்கல் செய்தனர். அவரின் மனு நிராகரிக்கப்பட்டது என்பது வேறு கதை. இருந்தாலும், உதயநிதி அதிகாரபூர்வ தேர்தல் அரசியல் என்ட்ரிக்கான நாள் வெகு தொலைவில் இல்லை என்றே சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தமிழக பாஜக இளைஞரணி துணைத் தலைவர் எஸ்.ஜி.சூர்யா, ‘திமுக அறக்கட்டளையின் உறுப்பினராக உதயநிதி இருக்கிறார். அந்த அறக்கட்டளையின் கீழ் கோடான கோடி சொத்துகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். 

 

அதற்கு ட்விட்டரிலேயே பதிலடி கொடுத்த உதயநிதி, ‘திமுக அறக்கட்டளையில் நான் உறுப்பினர் என்பதை நீங்கள் நிரூபித்தால், நான் பாஜக-வில் இணையத் தயார். அதுதான் எனக்குக் கொடுக்கப்படும் மிகக் கொடூரமான தண்டனையாக இருக்கும்' என்று கேலி செய்துள்ளார். 

உதயநிதியின் இந்த ரிப்ளை ட்ரெண்டாகி வருகிறது. 


 

.