This Article is From Mar 10, 2020

கொரோனா அச்சுறுத்தலால் ஹோலி கொண்டாட்டத்தைத் தவிர்க்கும் அரசியல் தலைவர்கள்!!

இந்தியாவில் 43 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 6 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

கொரோனா அச்சுறுத்தலால் ஹோலி கொண்டாட்டத்தைத் தவிர்க்கும் அரசியல் தலைவர்கள்!!

ஹோலி கொண்டாட்டத்தை தவிர்ப்பதாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • பொது இடங்களில் கூட வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்
  • அரசியல் தலைவர்கள் பலர் ஹோலி கொண்டாட்டத்தை தவிர்த்துள்ளனர்
  • இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43-ஆக உயர்வு
New Delhi:

கொரோனா அச்சுறுத்தி வருவதால் அரசியல் தலைவர்கள் பலர் ஹோலி கொண்டாட்டத்தைத் தவிர்த்துள்ளனர். 

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பதிவில், 'பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கொரோனாவை எதிர்கொள்ளும் மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதனால் ஹோலி பண்டிகை எதிலும் பங்கேற்க மாட்டேன்.' என்று கூறியுள்ளார். 

கடந்த வாரம் ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, அவரும் ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

மோடி தனது ட்விட்டர் பதிவில், 'சர்வதேச மருத்துவ வல்லுநர்கள் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு நான் ஹோலி பண்டிகையில் பங்கேற்பதைத் தவிர்க்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று பல்வேறு அரசியல் தலைவர்கள் ஹோலி கொண்டாட்டத்தைத் தவிர்ப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மொத்தம் 43 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 6 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பைச் சோதிக்க 52 ஆய்வகங்கள் உள்ளன. கூடுதலாக 57 ஆய்வகங்களில் கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. 

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார். 

ஹோலி வர்த்தகத்தையும் கொரோனா கடுமையாகப் பாதித்துள்ளது. மக்கள் வெளியே வரத் தயக்கம் காட்டுவதால் பல்வேறு மாநிலங்களில் ஹோலி விற்பனை குறைந்திருக்கிறது. 

கைகளைச் சுத்தம் செய்யும் சேனிட்டைஸரின் விற்பனை, கொரோனா அச்சுறுத்தலால் அதிகரித்துள்ளது. இதனால் சில இடங்களில் சேனிட்டைஸரின் விலையைக் கடைக்காரர்கள் சிலர் அதிகரித்திருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதுபற்றி தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரை மையமாகக் கொண்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 100 நாடுகளில் பரவியுள்ளது. 

.