This Article is From Jan 07, 2020

மு.க.ஸ்டாலினுக்காக பிரத்யேக ‘வழிபாடு’… 108 தேங்காய் உடைத்து இந்து மக்கள் கட்சி வேண்டுதல்!

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் இந்த வேண்டுதலை முன்னின்று நடத்தியுள்ளார். 

மு.க.ஸ்டாலினுக்காக பிரத்யேக ‘வழிபாடு’… 108 தேங்காய் உடைத்து இந்து மக்கள் கட்சி வேண்டுதல்!

வேம்படி இசக்கி மாரியம்மன் திருக்கோயிலில் 108 தேங்காய்களை உடைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்காக பிரத்யேக வேண்டுதலில் ஈடுபட்டுள்ளது இந்து மக்கள் கட்சி.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வேண்டுமென்றே பிரசாரம் செய்து வருவதாகவும் அவருக்கு நல்ல புத்தியைக் கடவுள்தான் கொடுக்க வேண்டும் என்றும் கோரி வேண்டுதல் செய்துள்ளனர் இந்து மக்கள் கட்சிப் பிரமுகர்கள்.

தூத்துக்குடியில் இருக்கும் அருள்மிகு வேம்படி இசக்கி மாரியம்மன் திருக்கோயிலில் 108 தேங்காய்களை உடைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்காக பிரத்யேக வேண்டுதலில் ஈடுபட்டுள்ளது இந்து மக்கள் கட்சி. அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் இந்த வேண்டுதலை முன்னின்று நடத்தியுள்ளார். 

வேண்டுதலுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “குடியுரிமை திருத்தச் சட்டம், இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு நல்லது என்று நன்கு தெரிந்திருந்தும், மு.க.ஸ்டாலின் அதற்கு எதிராகப் பிரசாரம் செய்து வருகிறார். பொய்ப் பிரசாரம் செய்கிறார். அந்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்பது போல ஒரு தோற்றத்தை அவர் உருவாக்கி வருகிறார். அவருக்கு இறைவன்தான் நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும். அதற்காகவே இந்த சிறப்பு வழிபாடு,” என்று கூறியுள்ளார். 

3pma0be8

2020 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் பேரவைக் கூட்டம் தொடங்கியது. அப்போது தமிழக திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்துப் பேச ஆரம்பித்தார். உடனே குறுக்கிட்ட ஆளுநர், “ஒரு நிமிடம், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்,” என்று சொன்னார். உடனே, அதிமுக எம்எல்ஏக்கள் மேசைகளைத் தட்டி சத்தம் எழுப்பினார்கள். 

தொடர்ந்து ஸ்டாலின், குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றியும், அதற்குத் தமிழக அரசு ஆதரவாக இருப்பது பற்றியும் விமர்சித்து உரையாற்றத் தொடங்கினார். ஸ்டாலினின் ஒலிப் பெருக்கி அணைத்து வைக்கப்பட்டிருந்தாலும், அவர் தொடர்ந்து உரையாற்றியபடியே இருந்தார். இதனால் எரிச்சலடைந்த ஆளுநர் புரோகித், “மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரே, நீங்கள் மிகச் சிறந்த பேச்சாளர் என்பது எனக்குத் தெரியும். நாட்டுக்கேத் தெரியும். அந்த திறமையை நீங்கள் இங்கே காட்டக் கூடாது. இந்த அவை விவாதங்களுக்கானது. விவாதம் செய்ய இந்த இடம் பயன்படுத்தப்பட வேண்டும். உரையாற்ற அல்ல,” என்றார். ஸ்டாலினுக்கு இப்படி ஆளுநர் ‘நோஸ் கட்' கொடுக்க, உஷ்ணமான திமுக எம்எல்ஏக்கள் கூச்சலிட ஆரம்பித்தனர். 

தொடர்ந்து ஸ்டாலின், “ஆளுநர் உரையால் நாட்டில் எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை. அதிமுக அரசு எழுதி கொடுத்ததை அப்படியே உரையில் ஒப்பிக்கிறார் ஆளுநர்,” என்று குற்றம் சாட்டிவிட்டு நடையைக் கட்டினார். அவருடன் மற்ற திமுக எம்எல்ஏக்களும் வெளியே சென்றனர். 


 

.