This Article is From Jul 12, 2019

“நான் ரெடி… நீங்க ரெடியா…”- நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயார் என சவால்விட்ட குமாரசாமி!

அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா ஏற்கப்படும் பட்சத்தில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கு, சட்டமன்றத்தில் பெரும்பான்மை குறையும்.

“நான் ரெடி… நீங்க ரெடியா…”- நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயார் என சவால்விட்ட குமாரசாமி!

காங்கிரஸ் தரப்போ, அதிருப்தி எம்.எல்.ஏ-க்களிடம் சமாதானம் பேச கடுமையாக முயன்று வருகிறது.

Bengaluru:

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசின் ஸ்திரத்தன்மை குறித்து இன்று அம்மாநில சட்டமன்றத்தில் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கிடையில் பேசிய கர்நாடக முதல்வர் குமராசாமி, “எனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துங்கள்” என்று சவால்விட்டார். 

“நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன். அதற்கு நேரம் குறிக்கவும். நான் எதற்கும் தயாராகவே இருக்கிறேன். ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எனக்கில்லை” என்று கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் போது பேசினார் குமாரசாமி. 

கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசிலிருந்து இதுவரை 18 எம்.எல்.ஏ-க்கள் பாஜக முகாம் நோக்கி சென்றுள்ளனர். அவர்களில் 10 பேர், தங்களது ராஜினாமா கடிதத்தை, சில நாட்களுக்கு முன்னர் மாநில சட்டசபை சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமாரை சந்தித்து கொடுத்தனர். அதை அவர் ஏற்கவில்லை என்று குற்றம் சாட்டி, உச்ச நீதிமன்றத்தை நாடினார்கள். இதைத் தொடர்ந்து நீதிமன்றம், ‘6 மணிக்குள் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகர் முன்னர் ஆஜராக வேண்டும்' என்று நேற்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நேற்று சட்டமன்ற உறுப்பினர்களை, நேரில் சந்தித்தார் சபாநாயகர் ரமேஷ் குமார். 

அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா ஏற்கப்படும் பட்சத்தில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கு, சட்டமன்றத்தில் பெரும்பான்மை குறையும். எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக-வுக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் தரப்போ, அதிருப்தி எம்.எல்.ஏ-க்களிடம் சமாதானம் பேச கடுமையாக முயன்று வருகிறது. ஆனால், இதுவரை அதில் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. 

இன்று இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம், “அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா குறித்து சபாநாயகர் எந்தவித முடிவையும் எடுக்கக் கூடாது. இந்த வழக்கு மீண்டும் செவ்வாய் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரை, இந்த நிலையே தொடர வேண்டும்.” என்று உத்தரவிட்டுள்ளது.

.