எடியூரப்பாவின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு தனது முழு ஆதரவை அளிப்பதாக குமாரசாமி தெரிவித்திருக்கிறார்.
Bangalore: சமீபத்தில் கர்நாடக பாஜக முதல்வர் எடியூரப்பா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் இஸ்லாமிய சமூகம் முழு ஒத்துழைப்பை தருகிறது. எனவே அவர்களுக்கு எதிரான கருத்துகளை யாரும் பரப்பக்கூடாது என்று டி.வி 9 என்ற உள்ளூர் கன்னட சேனலுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். எடியூரப்பாவின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு தனது முழு ஆதரவை அளிப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் தலைவருமான குமாரசாமி தெரிவித்திருக்கிறார்.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரக்கூடிய நிலையில், கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் இஸ்லாமியர்களின் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் கொரோனா தொற்றுக்கு பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் எந்தவொரு குறிப்பிட்ட சம்பவத்திற்கும் ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பேற்கக் கூடாது என்றும், சமூகத்திற்கு எதிராக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றும் முதல்வர் கூறினார்.
கொரோனா தொற்று நெருக்கடிக் காலகட்டத்தில் வகுப்புவாத பொறுப்பாளர்களைக் கையாள்வதில் எடியூரப்பா காட்டிய தீர்மானத்தை நான் வரவேற்கிறேன். ஆனால், இந்த அறிவிப்புக்கு பிறகும், பல ஊடகங்கள் மத வெறுப்பு பிரச்சாரத்தினை தொடர்ந்து வருகின்றன என குமாரசாமி குறிப்பிட்டிருந்தார்.
கர்நாடகாவின் பாஜக எம்.பிகளில் ஒருவரான ஷோபா கரண்ட்லேஜே மற்றும், கர்நாடக சுற்றுலா துறை அமைச்சரான சி.டி ரவி போன்றோர் முதல்வர் சகாக்களாவார்கள். ஆனால், இவர்கள் தொடர்ந்து கொரோனா தொற்று பரவலில், இஸ்லாமிய சமூகத்தினர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பொதுவெளியில் இம்மாதிரியான சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என்று தனது கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று குமாரசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதர மாநிலங்களைப்போல கர்நாடகாவிலும், டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்கள் சுகாதார அதிகாரிகளை அணுகி தங்களைப் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டனர். இது குறித்த ஒரு கூட்டத்தில் அவர் தங்கள் ஒத்துழைப்பை அளிப்பதாக தெரிவித்துள்ளனர் என்று முதல்வர் குறிப்பிட்டிருந்தார்.
கர்நாடக மாநிலத்தில் 175 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்வர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 25 பேர் குணமடைந்தது வீடு திரும்பியுள்ளனர்.