“நான்தான் ஹாப்பியஸ்ட் பெர்சன்!”- ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு ‘கூல்’ குமாரசாமி

கடந்த செவ்வாய் கிழமை கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.

பாஜக-வின் எடியூரப்பா, சீக்கிரமே கர்நாடகத்தின் முதல்வராக பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது. 

ஹைலைட்ஸ்

  • 14 மாதங்கள் மக்கள் பணியாற்றியது மகிழ்ச்சி: குமாரசாமி
  • செவ்வாயன்று, குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது
  • கர்நாடகத்தில் பாஜக, ஆட்சியமைக்க உள்ளது
Bengaluru:

கர்நாடக முதல்வராக இருந்த குமராசாமி, தனது பதவியை நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பின்னர் இழந்திருக்கலாம். ஆனால், மிகவும் மகிழ்ச்சியான மனிதர் தானே என்று கூறியுள்ளார் குமாரசாமி. இதற்குக் காரணமாக அவர் சொல்வது, “ஓராண்டுக்கு மேல் என் மாநில மக்களுக்கு முதல்வராக பணியாற்றியது பாக்கியம்” என்கிறார். 

“இந்த தருணத்தில் நான்தான் மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக இருப்பேன். காரணம், கடந்த 14 மாதங்களாக எனது மாநில முன்னேற்றத்துக்குத் தொடர்ந்து பணியாற்றியது. பல தடங்கல்கள் வந்தாலும் எனது பணியை நான் சரியாக செய்தேன்” என்று NDTV-யிடம் குமாரசாமி கூறியுள்ளார். 

கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் - மஜத கூட்டணியிலிருந்த 16 எம்.எல்.ஏ-க்கள், பாஜக முகாம் நோக்கி சென்றனர். கூட்டணிக்கு ஆதரவு கொடுத்து வந்த இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏ-க்களும் பாஜக-வுக்கு ஆதரவாக மாறினார்கள். இதனால், கடந்த செவ்வாய் கிழமை கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் கூட்டணி அரசுக்கு 99 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. பாஜக-வுக்கு 105 பேர் ஆதரவாக இருந்தனர். இதனால் கூட்டணி அரசு கவிழ்ந்தது. பாஜக-வின் எடியூரப்பா, சீக்கிரமே கர்நாடகத்தின் முதல்வராக பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது. 

நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னரே குமாரசாமி, “பதவியை இழப்பது குறித்து நான் அச்சப்படவில்லை. பாஜக-வின் சுயரூபத்தைக் காட்டவே முயன்று வருகிறேன். நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கத் தயார்” என்று சவால்விட்டார். 

இந்நிலையில் அவர், பதவி இழந்தது குறித்து மேலும் நம்மிடம் பேசுகையில், “அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் குறித்து இனியும் பேச ஒன்றுமில்லை. காங்கிரஸ் - மஜத கூட்டணி குறித்து கட்சித் தலைமைதான் முடிவெடுக்க வேண்டும். தற்போது என் மீது எந்த அழுத்தமும் இல்லை. எனது கட்சியை வளர்ப்பதில்தான் எனது முழு கவனமும் இருக்கும்” என்று விளக்கியுள்ளார். 

காங்கிரஸின் சித்தராமையா, “பாஜக-வின் ஆபரேஷன் கமலா-வுக்கு வீழ்ந்தவர்களுக்கு, இனி காங்கிரஸில் இடம் கிடையாது. துரோகம் செய்தவர்களுக்கு இனி வாய்ப்பு கொடுக்கப்படாது” என்று கறாராக பேசியுள்ளார்.