This Article is From Aug 01, 2018

கர்நாடகாவில் சூடுபிடிக்கும் தனி மாநில கோரிக்கை… முதல்வர் குமாரசாமி பதில்!

கர்நாடகாவில், வட கர்நாடகாவை தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி சில அமைப்புகள் பிரச்னை கிளப்பி வருகின்றன

கர்நாடகாவில் சூடுபிடிக்கும் தனி மாநில கோரிக்கை… முதல்வர் குமாரசாமி பதில்!
Bengaluru:

கர்நாடகாவில், வட கர்நாடகாவை தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி சில அமைப்புகள் பிரச்னை கிளப்பி வருகின்றன. இந்நிலையில் இது குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி.

குமாரசாமியின் மஜகவும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து கர்நாடகாவில் ஆட்சி அமைத்துள்ளன. குமாரசாமி தலைமையில் பதவியேற்ற அரசு, சமீபத்தில் தான் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. தொடர்ந்து 49,000 கோடி ரூபாய் அளவிலான விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், பட்ஜெட்டில் வட கர்நாடகத்துக்கு, மாநில அரசு துரோகம் இழைத்துவிட்டதாகவும், சட்டமன்றத்தில் போதுமான பிரதிநிகள் இல்லையென்றும் கூறி ‘தனி மாநில கோரிக்கை’ முன் வைத்து பிரச்னை செய்து வருகின்றன சில உள்ளூர் அமைப்புகள். நாளுக்கு நாள் இந்தப் பிரச்னையின் வீரியம் அதிகரித்து வருவதையொட்டி, அது குறித்து பேசியுள்ளார் குமாரசாமி.

‘வட கர்நாடகத்திலும் அரசு நிர்வாகம் முறைப்படி செயல்பட வேண்டும் என்ற நோக்கில், அங்கு சில அரசு அதிகாரிகள் செயல்படுவதையும், அரசு அலுவலகங்கள் செயல்படுவதையும் உறுதி செய்யப் போகிறோம். வட கர்நாடக மக்களுக்கு நான் ஒரேயொரு கோரிக்கையை வைக்கிறேன். நீங்கள் என்னை உங்களில் ஒருவனாக நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக நான் நிறைய திட்டங்களை வகுத்து வைத்துள்ளேன். அதை அமல்படுத்த அனுமதியுங்கள்’ என்றவர்,

தொடர்ந்து, ‘வட கர்நாடகத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதற்கு எனக்கு நேரம் வேண்டும். எந்த வித தொந்தரவுகளும் இல்லாமல் எனக்கு ஓர் ஆண்டு கொடுக்கப்பட்டால் தேவையான மாற்றங்களை செய்துவிடுவேன். நான் வட கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக 24 மணி நேரமும் வேலை செய்யத் தயார்’ என்று சொல்லியுள்ளார்.

இந்தப் பிரச்னை தற்போது பூதகரமெடுத்துள்ளதால், மாநிலத்தின் ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சியான பாஜக-வுக்கு மோதல் அதிகரித்து வருகிறது. எடியூரப்பா, ‘முதல்வர் மக்களை பிரித்து ஆளப் பார்க்கிறார்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அதற்கு குமாரசாமி, ‘நான் 49,000 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளேன். அதை பாஜக-வால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒரு விஷயம் தேவைப்படுகிறது. இதை கையிலெடுத்துக் கொண்டார்கள்’ என்றுள்ளார்.

வட கர்நாடக்கதில் இருக்கும் 13 மாவட்டங்களில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளூர் அமைப்புகள் நாளை பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

குமாரசாமி மேலும், ‘வட கர்நாடகத்திலிருந்து இதுவரை தேர்ந்தெடுத்து சட்டமன்றத்துக்கு வந்த நபர்கள் அவர்களின் கடமையை சரிவர செய்யவில்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால், அதைப் பற்றியெல்லாம் நான் இப்போது பேசப் போவதில்லை. அங்கு என்ன தேவையோ அதைச் செய்வதற்கு என்னிடத்தில் ஒரு வாய்ப்பு உள்ளது’ என்றார் இறுதியாக.

.